சல்லி சல்லியா சரியும் கனவு கோட்டை! ஜாம்பவான்களை பதம் பார்த்த தவெக? ட்ரிபிள் டிஜிட்டில் வெற்றி தோல்வி?
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய்யின் வருகை, பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது. சில தொகுதிகளில் 3 இலக்கத்தில்கூட வாக்கு வித்தியாசம் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த முறை தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 84 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதிக வாக்குப்பதிவுக்கு எஸ்ஐஆர் நடவடிக்கை, இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் தீவிர பிரசாரம் போன்றவை காரணமாகக் கூறப்படுகின்றன.

தமிழக அரசியல் கடந்த பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரிய கட்சிகளை மையமாகக் கொண்ட இருமுனைப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த முறை அரசியல் களம் மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தவெக தாக்கம்
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது காரணமாக, இம்முறை போட்டி மும்முனையாகவும், சில இடங்களில் நான்கு முனையாகவும் மாறியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. முந்தைய தேர்தல்களின் முடிவுகளை எடுத்துப் பார்த்தாலே, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகள் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் வித்தியாசத்தில் 9 தொகுதிகள் முடிவுகள் கிடைத்தன.
குறைந்த வாக்கு வித்தியாசம்
2016ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. 2021ஆம் ஆண்டு மீண்டும் 8 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. அதேபோல், 1,000 முதல் 5,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாக இருந்துள்ளது. இதன் மூலம், குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசங்களே பல தொகுதிகளில் வெற்றியை மாற்றி அமைக்கக்கூடியது என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இருமுனைப் போட்டி
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது பல கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டணி வலுவானதாக இருந்தது. அதற்கு எதிராக திமுக கூட்டணியும் போட்டியிட்டது. இந்த இருமுனைப் போட்டி அந்த தேர்தலின் முக்கிய அம்சமாக இருந்தது. 2016ஆம் ஆண்டு தேர்தல் சூழல் முற்றிலும் மாறியது. பல கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் ஐந்து முனைப் போட்டி உருவானது.
2021 சட்டசபை தேர்தல்
இதனால் வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கு பிரிந்தன. அதனால் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டு தேர்தலும் பல முனைப் போட்டியாகவே அமைந்தது. அந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்தது. அதே நேரத்தில், பல சிறிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2026 சட்டசபை தேர்தல்
இந்நிலையில் 2026ஆம் ஆண்டு தேர்தல் மேலும் வித்தியாசமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் காரணமாக நான்கு முனைப் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் மற்றும் அரசியலில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் புதிய அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது.
தேர்தல் முடிவுகள்
இதனால் இந்த முறை பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கலாம் என்றும், சில இடங்களில் 500 அல்லது 1000 வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். மொத்தத்தில், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்லாமல், எத்தனை தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவுகள் மாறும் என்பது கூட முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட குறைந்த வாக்கு வித்தியாசங்கள் போலவே, இந்த முறை அதைவிட அதிகமான தொகுதிகளில் அதுபோன்ற நிலை உருவாகலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications