இந்து மதத்தை ஒழிக்கணும்னு உதயநிதி சொல்லவே இல்லை! பாஜக ஐடி விங்கின் வேலை இது! ஸ்டாலின் விளக்கம்!
சென்னை: சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் உதயநிதி பேசினாரே தவிர, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களை பொறுத்தவரை அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிப்பவர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக 'தைனிக் ஜாக்ரன்' இந்தி நாளேட்டுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு;

கேள்வி: அண்மையில், உங்கள் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் வட இந்தியாவில் பெரிய சர்ச்சை உண்டாக்கியது. அதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதை, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதாக பா.ஜ.க.வின் ஐடி விங் பொய்யாகப் பரப்பியது. அதே போல 'ஜெனோசைட்' என்ற சொல்லையும் உதயநிதி பயன்படுத்தவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த சாதனையும் இல்லை.
7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல்கள்தான் வெளிப்பட்டுள்ளன. இந்த ஊழல்களுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க அரசு - ஊழல்களைச் சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி அதிகாரிகளை மாற்றி இருக்கிறது. இவற்றைத் திசைத்திருப்ப உதயநிதி பேச்சை சர்ச்சையாக்கி உள்ளார்கள்.
கேள்வி: சனாதனம் பற்றி உங்கள் மகன் தெரிவித்த கருத்துகளை அவர் திரும்பப் பெறவில்லை. நீங்களும் இது குறித்துப் பேசாமல் இருப்பதில் ஏதேனும் அரசியல் நலன் சம்பந்தப்பட்டுள்ளதா?
பதில்: எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிப்பவர்கள். ஏற்றத்தாழ்வுகளை உறுதியாக எதிர்ப்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த 889 நாட்களில் 1000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இரண்டரை ஆண்டுகாலத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளோம்.
கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி பணி நியமனம், பெண் அர்ச்சகர்கள் - பெண் ஓதுவார்கள் நியமனம் என இந்து மதக் கோயில்களை புனரமைத்து, பக்தர்களுக்கு வசதிகளைப் பெருக்கித் தந்திருக்கிறோம். தேரோட்டம் உள்ளிட்ட கோயில் விழாக்கள் அந்தந்த திருக்கோயில்களின் நடைமுறைப்படி நடத்தப்படுகின்றன. இதுதான் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் பார்வையாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications
