கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் நிபந்தனையற்ற ஆதரவு திமுகவிற்கு அளிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் அறிவித்த நிலையில், அவர் செய்தது தியாகம் எனவும், கமல்ஹாசனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

சவால் எல்லாம் விட மாட்டேன்
ஒரே கொள்கையும் ஒரே இலக்கையும் நோக்கித்தான் நான் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். இப்பவும் அதுதான். இப்பொழுது நம்முடைய நாட்டிற்கான முக்கியமான போராட்டம் நடந்து கொண்டுஇருக்கிறது.. அதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதற்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டியது எனது கடமை என்று நான் முடிவு செய்து பல நாள் ஆகிவிட்டது.
பாரத் ஜோடோ யாத்திரையில் நடக்க ஆரம்பித்ததில் இருந்து இங்கே வந்து கை கொடுத்தது வரை இதை என்னுடைய கடமையாக நான் நினைக்கிறேன். எனக்கு அரசியல் தொழில் அல்ல. கடமை. அப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும். எந்த தலைவர் இப்படி செய்தார் என்று நான் சவால் எல்லாம் விட மாட்டேன். கேட்க மாட்டேன். நான் செய்து இருக்கிறேன்..
வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம்
அதுதான் நான் நம்பும் அரசியல். சுயநலமற்றதாக கடமையாக அது இருக்க வேண்டும். எல்லோருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்பி வந்தவன்நான். அதே பயணத்தில்தான்நான் நடந்து கொண்டு இருக்கிறேன். இந்த முயற்சி ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பவர்கள் அது ஒரு தமிழ் குடிமகனின் உரிமை. அந்த வகையில் ஒரு கட்சி தலைவனின் என்ற நிலைய்லும் நன் எடுத்து இருக்கும் முடிவு இந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும். மலர வேண்டும் என்பதுதான்.
அது என் முடிவு. என்னுடன் பயணிப்பவர்கள் என்னுடைய தொண்டர்கள், என்னுடன் தொடர்ந்து நடைபோட்டு கொண்டு இருக்கிறார்கள். முதல்வரை சந்தித்த போது உங்களை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன் என்று வாழ்த்தகூட இல்லை. இது எங்களின் எதிர்பார்ப்பு நீங்கள் நடத்தி காட்டுவீர்கள் என்று சொல்லிவிட்டுவந்தேன்.
நாங்கள் திமுகவுடன் நிற்போம். சீட் எத்தனை என்று நான் எப்பவுமே எண்ணியது இல்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம். நெருக்கடி என்பது தமிழ்நாட்டுக்கே வந்து உள்ளது. கட்சிக்கு அல்ல.. எங்க கட்சிக்கு என்று சுயமரியாதை உள்ளது. என்னை பெரு மரியாதையுடன் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அதனால், திமுகவுடன் நிற்பதை கடமையாக கருதுகிறேன். என்றார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது.
எனது அன்பான வேண்டுகோள்
அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications