Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம்...முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

சமூகத்தில் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டை, சட்டத்தின் வாயிலாகவும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் வாயிலாகவும் மேற்கொள்ளும் நமது அரசின் செயல்பாடுதான், இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ‘திராவிட மாடல் என்று முதல்வர் மு.க ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை நமது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மீது அதிக அக்கறையும்- அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் வீறு நடைபோடும் நமது அரசு- இந்த மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத் திட்டங்களை முனைப்போடு நிறைவேற்றி வருகிறது.

CM MK Stalins announcement samapanthi bhojanam turn to samathuva virunthu

இந்த நிலையில்தான், இத்தகைய விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் கூட்டத்தை நடத்துவதை மிக முக்கியமான கடமையாக கருதி நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆதிக்க சக்திகள் திணித்த தீண்டாமை எந்த வடிவத்திலும் சமூகத்தில் இருக்கக் கூடாது. அதைத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டக்கூறு 17 சொல்கிறது. அதனை உறுதிசெய்வதுதான் மக்களுக்காகப் பணியாற்றும் நம்முடைய தலையாய கடமையாக அமைந்திருக்கிறது.

சமத்துவத்தை நிலைநாட்டுவதை அனைத்து தனிநபர்களும் தங்களது வாழ்க்கை நெறியாகக் மனதிலே பதிவு செய்து கொள்ள வேண்டும்! அதனால்தான் இந்த அரசு பொறுப்பேற்ற உடனே ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 மற்றும் 1995-ஆம் ஆண்டு விதி 16-ன்படி மாநில அளவிலான 'உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு' திருத்தியமைக்கப்பட்டது.

அதன் முதல் கூட்டம் 19-08-2021 அன்று நடத்தப்பட்டது. அப்போது அதில் பங்கேற்ற உறுப்பினர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை நமது அரசு பரிசீலித்து, முதல் வரவு - செலவு கூட்டத் தொடரிலேயே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதில்தான், 'மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்' அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை 110 விதியின் கீழ் நான் வெளியிட்டேன். உடனடியாக அதற்கான சட்டம் 22-09-2021 அன்று இயற்றப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது. ஆணையத்திற்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் 4 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, அந்த ஆணையம் தற்போது எண்.31, தேனாம்பேட்டை, செனடாப் சாலையில் உள்ள தாட்கோ தலைமை அலுவலகக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணையும் போடப்பட்டுவிட்டது.

இதுதொடர்பான வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடத்தப்படும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

"ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்.. நமது அரசின் செயல்பாடுதான், இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல்"வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரைச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும் முயற்சியாக- 'முறையாக நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம்' ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் நான் அறிவித்தேன்.

அதோடு, "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன என்பதை இன்று உங்களிடையே நான் பகிர்ந்துகொள்கிறேன்.

தற்போது உள்ள சிறப்பு நீதிமன்றங்களுடன் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன். அந்த ஊர்களில் நீதிமன்றங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

CM MK Stalins announcement samapanthi bhojanam turn to samathuva virunthu

தமிழ்நாட்டில் சில கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தின் மூலமாக அந்த ஊரின் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 10 மாவட்டங்களில் தலா மூன்று ஊர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாவட்டத்திற்கு 30 லட்சம் என்ற வீதத்தில், 3 கோடி ரூபாய் இத்திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தினை மேம்படுத்தும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் பயன்பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகனமேடைகள், 17 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் 16,442 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் 1,589 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

2022-2023-ஆம் ஆண்டின் மொத்த ஒதுக்கீடான 4281 கோடி ரூபாய் நிதியில் கல்விசார்ந்த திட்டங்களுக்கான 3571 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், High Tech Laboratories, பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் கணித உபகரணப் பெட்டி ஆகியவையும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின்கீழ் 123 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையுடன், ஆதிதிராவிட மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்விக் கட்டண சலுகைகள், விலையில்லாச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நிதிநிலை அறிக்கையில் சிறப்பான பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. சிந்தனை செல்வன் அவர்கள் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்ற வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதை இந்த கூட்டத்தின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை நமது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.

ஒருபக்கம் சமத்துவபுரம்! இன்னொருபக்கம் 'சமூகத்தில் அனைவரும் சமம்' என்ற கோட்பாட்டை, சட்டத்தின் வாயிலாகவும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் வாயிலாகவும் மேற்கொள்ளும் நமது அரசின் செயல்பாடுதான், இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய 'திராவிட மாடல்' என்பதை நான் பெருமையுடன் பதிவு செய்கிறேன். இந்த 'மாடல்', அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களினுடைய குரல்! அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தரும் குரல்! தோளோடு தோள் நின்று அவர்களைப் பாதுகாக்கும் குரல்!

அவர்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு நமது அரசு எப்போதும் துணை நிற்கும்!
எனவே, இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பல கருத்துக்களை, பல யோசனைகளை, இந்த அரசு செய்யவேண்டிய பணிகள் குறித்து சொல்ல இருக்கிறீர்கள். உங்களுடைய மேலான ஆலோசனைகளை செயல்படுத்தி, வரக்கூடிய காலக்கட்டத்தில் அதை நிறைவேற்றி தருவோம் என்பதை இந்த நேரத்திலே நான் உறுதியோடு சொல்ல விரும்புகிறேன்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நமது அரசு முன்னெடுக்கிறது. அதனைச் செயல்படுத்த அரசுக்கு எல்லா வகையிலும் நீங்கள் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டு, என்னுடைய முன்னுரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+