நிதி ஆயோக் கூட்டம்: போய் கேட்டால்தான் பணம் வரும்.. முதல்வர் கண்டிப்பாக போகனும்.. அண்ணாமலை அட்வைஸ்
சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை. இந்த ஆண்டும் போகமாட்டேன் என்றால் என்ன அர்த்தம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் போய் கேட்டால்தான் பணம் வரும் என்றும் கூறினார்.
வரும் 27 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. மாநில முதல்வர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை என்பதால் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று கூறினார்.

இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை இது தொடர்பாக கூறியதாவது:- 48 லட்சத்து 20 ஆயிரத்து 512 கோடி ரூபாயை நாட்டில் இருக்கிற எல்லா மக்களுக்கும் பயன்படுத்த கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொல்கிறது எல்லாம் பொய்தான். இவர்களுக்கு மனசு இல்லை.
தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பேசி கொண்டு வருவதற்கு முதல்வருக்கு முடியாது. 2022 ஆம் ஆண்டும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதல்வர் போகவில்லை. 2023 ஆம் ஆண்டும் முதல்வர் போகவில்லை. 2024 ஆம் ஆண்டும் போகமாட்டேன் என்றால் என்ன அர்த்தம். ஆண்டுக்கு ஒருமுறை எல்லா முதல்வர்களும் பாரத பிரதமரோடு சந்திக்கக்கூடிய கூட்டம் இது. அந்த கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களுக்கு என்ன தேவையோ அதை பற்றி பேச முடியும்.
முதல்வர் ஸ்டாலின் செல்வதற்கு போக மனமில்லை. அதற்கு சாக்கு போக்கு சொல்வதற்கு இதனை கையிலெடுத்து பேசி வருகிறார்கள். தமிழக பாஜக சார்பில் கோரிக்கை என்னவென்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களின் பிரச்சினைகளை சொல்ல வேண்டும். தமிழகத்துக்கு அடுத்த வருடம் கூடுதல் வரி தர வேண்டும், தமிழகத்திற்கு இந்தந்த திட்டங்களுக்கு பணம் வேண்டும் என கேட்டு பெற வேண்டும்.

இதையெல்லாம் பற்றி பேசவே மாட்டார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்கு. அதைப்பற்றியும் பேச மாட்டார். நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் சொன்னாங்க.. மகாராஷ்டிரா என்ற பெயரை நான் பயன்படுத்தவில்லை. ஆனால் 67000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று.
தமிழக முதல்வர் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்தின் தேவையை, ஆக்கப்பூர்வமான கருத்தை எடுத்து சொல்ல வெண்டும் என்றும், மத்திய அரசு செய்வதையெல்லாம் பொய்யை சொல்லி பொய்யை சொல்லி, தனக்கு இருக்கக்கூடிய ஊடக பலத்தை பயன்படுத்தி இதன் மூலமாக இதனை மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைப்பது முட்டாள் தனம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications