வைக்கத்தில் மாபெரும் விழா.. நாளை பெரியார் நினைவகம் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்
சென்னை: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நாளை வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார். கேரள மாநில திமுக சார்பில், கேரள பாரம்பரிய முறையில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கத்தில் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 1924-ம் ஆண்டு அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

தலைவர்கள்: இதில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பெரியார் அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்தி, மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினார். இந்த போராட்டம் வெற்றி பெற்றதால். "வைக்கம் வீரர்" என பெரியார் போற்றப்பட்டார். இந்த போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.
இதனிடையே போராட்ட வெற்றியை நினைவுகூரும் விதமாக, வைக்கத்தில் பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது.
சீரமைப்பு பணிகள்: அந்த நினைவகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், அதை ரூ.8.14 கோடியில் சீரமைக்க உத்தரவிட்டார். சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவகத்தில் பெரியார் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சி கூடம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா மற்றும் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை 12ம் தேதி காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இந்த மாபெரும் விழாவிற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார்.
தலைவர்கள் பங்கேற்பு: திராவிடர் கழக தலைவரும், கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்
இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 11-ம் தேதி கோட்டயம் செல்கிறார். கேரள செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர். முருகேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில திமுக சார்பில், கேரள பாரம்பரிய முறையில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications