தமிழக பல்கலைக்கழகங்களில் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்'.. முதல்வர் அசத்தல் அறிவிப்பு!
சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்' தொடங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் அவர் இது தொடர்பாக பேசியதாவது;

சமூக வாழ்வில் புகழ்
உயர்கல்வியால், ஒருவருக்குச் சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கிறது. வேலை கிடைக்கிறது. வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. சமூக வாழ்வில் புகழ் கிடைக்கிறது. இவை அனைத்துக்கும் உயர்கல்வியே அடிப்படையாக அமைகிறது. அதனால்தான், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள், அறிவியல் கல்லூரிகளாக, பொறியியல் கல்லூரிகளாக, மருத்துவக் கல்லூரிகளாக, சிறந்த கட்டமைப்பு வசதியுடன், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதில் எல்லோரும் பெருமைப்படுகிறோம்.

வெறும் வேலை வாய்ப்பு
வெறும் வேலை வாய்ப்பு மட்டும் தருவதை, உயர்கல்வியின் நோக்கமாக நான் கருதுவதில்லை. அந்த எண்ணங்களை உங்களிடம் பரிமாறிக் கொள்வதற்காகத் தான் இந்த கருத்தரங்கம் அமைந்திருக்கிறது. நாம் எப்போதும் உயர்ந்து நிற்கிறோம்! இதுபோதாது, இன்னும் உயர்ந்தாக வேண்டும்.தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற பலர் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து நல்ல முறையில் உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

தேசிய தர வரிசை
அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி, தமிழகப் பல்கலைக்கழகங்கள், சேர்க்கை வீதம், இடஒதுக்கீடு மற்றும் பேராசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குகிறது. கட்டமைப்பு, ஆசிரியர் தரம் மற்றும் நியமனம், கற்பித்தல் மற்றும் கற்றல், ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழக பல்கலைக்கழகங்கள் சிறப்பாக உள்ளன. தேசிய தர வரிசையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில், 6 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்கள் வரிசையில், 8 பல்கலைகக்கழகங்களும் இடம்பெற்று, நம் மாநிலத்தை உயர்கல்வியில் முதல் மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளன.

ஆராய்ச்சி ஊக்கத்தொகை
நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் "CM Research Fellowship" "முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை" திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தொழில்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த பயிற்சி வழங்க ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து "ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி" (Faculty Development Programme) வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications