அனைத்து நூல்களும் ஒரே இடத்தில்! தமிழகத்தில் பிரம்மாண்ட புத்தகப் பூங்கா! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு புத்தக வாசிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது.
தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

தமிழுக்குத் தொண்டு
தமிழுக்குத் தொண்டு செய்வோம் சாவதில்லை - தமிழ்த் தொண்டன் பாரதி தான் செத்ததுண்டோ ? - என்று பாடினார் புரட்சிக் கவிஞர். தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் அவர்களது படைப்புகளின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது புத்தகங்களின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களைப் போலவே இருக்கும் தமிழ்த் தொண்டர்களாகவும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அரசுக்கு பெருமை
அத்தகைய தீரமிகு எழுத்தாளர்கள் - கனல் தெறிக்கும் பேச்சாளர்கள் - களம் கண்ட போராளிகள் - ஆய்வு அறிஞர்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் -பத்திரிகையாளர்கள் - ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கிதன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்னொரு மிக முக்கியமான பெருமையை அடைகிறது. வாழும் காலத்திலேயே - தகுதிசால் தமிழ்த் தொண்டர்களைப் பாராட்டியது தமிழ்நாடு அரசு என்ற விருதை தமிழக அரசு அடைகிறது. இது தான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

அரசின் கொள்கை
யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினார்களோ - அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது என்பதை இந்த மாபெரும் நிகழ்ச்சியின் மூலமாகத் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் கட்டாயம்
தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும். ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

கலைஞர் பிறந்தநாள்
2010-ஆம்ஆண்டு முதல் வழங்கப்படாமலிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022-ஆம் நாளன்று வழங்கப்பட்டன. இனி ஒவ்வோர்ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளாம், ஜூன் மாதம் 3-ஆம் நாள் ரூ.10.00 இலட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும். பாரதி ஆய்வாளர்கள் ஐவருக்கு தலா 3 லட்சம் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம்.தமிழக எல்லைப் போராட்ட வீரர்கள் 110 பேருக்கு தலா 1 லட்சம் வழங்கி சிறப்புச் செய்திருக்கிறோம்.

தேர்தல் காலம்
புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேர்தல் காலம். உள்ளாட்சி அமைப்புனுடைய தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அதனை அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.

புத்தகப் பூங்கா
அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும் - அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தகப் பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார். பாபசி அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் உறுதி அளிக்கிறேன்.

வாழ்த்தி போற்றுகிறேன்
இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும். விருது பெற்ற அனைவரையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். உங்களது ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்த அரசுக்கு எப்போதும் தேவை. இது உங்களது அரசு. அந்த உரிமையோடு நீங்கள் வழிகாட்டுங்கள்.












Click it and Unblock the Notifications