கவுன்சிலர்களுக்கு ஜாக்பாட்! அமர்வு படி 5% முதல் 10% உயர்வு! ஒன்றியத் தலைவர்களுக்கு புதிய கார்கள்!
சென்னை: மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதேபோல் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் இதனையும் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு;

அமர்வு படி
ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாதாந்திர அமர்வுப் படி தொடர்பாக குறிப்பிட விரும்புகிறேன். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான், முதன்முதலாக மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படி வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, இன்றுவரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த இந்த அமர்வுப் படியினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

5% டூ 10%
அதன் அடிப்படையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் இந்த அவையில் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

உள்ளாட்சி பிரதிநிதிகள்
இவ்வாறு அமர்வுத் தொகை உயர்த்தி வழங்கப்படுவதால், தமிழகத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1 இலட்சத்து 19 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதன்மூலம் பயன்பெறுவார்கள்.

10 ஆண்டுகள்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படக்கூடிய பல்வேறு திட்டப் பணிகளைக் கண்காணித்திட முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு வாகனங்களே வாங்கப்படாத நிலையில், கடந்த ஆட்சியில் 2019-2020 ஆம் ஆண்டில், புதிய வாகனங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால்,செயல்முறைப்படுத்தப்படவில்லை.

புதிய கார்கள்
இதனால் ஏறத்தாழ 13 ஆண்டு காலமாக புதிய வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்படாத சூழல் உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் திறம்படக் கண்காணித்திட ஏதுவாக, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications