நடுக்கடலில் நடந்த கொடூரம்.. மீனவர் உயிரிழப்புக்கு காரணம் மத்திய அரசுதான்.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
சென்னை: இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் இதுபோன்ற சம்பவங்கள் நேர்வதாக தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகு, மீனவர்களின் விசைப்படகின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக மீனவர்களின் படகு சேதமடைந்து, நீரில் மூழ்கி உள்ளது.

அதில் இருந்த 4 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைப்படகின் உரிமையாளர் காத்திகேயன், மீன்வளத்துறை அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஒரு மீனவர் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வருகிறார்.
இலங்கை கடற்படையை கண்டித்தும், இதுபோன்ற சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தார் உள்ளிட்ட சக மீனவர்களும் உறவினர்களும் ராமேஸ்வரம் -தனுஷ்கோடி துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி மீன்பிடி விசைப்படகு கவிழ்ந்து பலியான மீனவர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் இராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் மத்திய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது. இச்சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications