கத்தியால் குத்தப்பட்டு பலியான இப்ராஹிம் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி.. முதல்வர் உத்தரவு!
சென்னை : விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் போதை நபர்களால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ராஹிம் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு வந்த ஞானசேகரின் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் அங்கு போதையில் தகராறு செய்துள்ளனர். அவர்கள் சண்டையிட்டு கொண்டிருந்த போது பள்ளிவாசலுக்கு சென்று திரும்பும் வழியில் அங்கு வந்த இப்ராஹிம் என்பவர் அவர்களை தடுத்து சமரசம் செய்து வைக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், வல்லரசு இருவரும் இப்ராஹிமை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் போதை நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ராஹிம் மறைவு தனக்கு வேதனை தருவதாகத் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த இப்ராஹிம் சஞ்சி குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications