மீனவர்கள் பிரச்சனைக்காக இதுவரை 76 முறை டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.. லிஸ்ட்டை அடுக்கிய ஸ்டாலின்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் இதுவரை 76 கடிதங்கள் எழுதியுள்ளேன் என சூரை மீன்பிடித் துறைமுகம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நெரிசல் அதிகமானதையடுத்து கில்நெட் வலை மூலம் பிடிக்கப்படும் சூரை வகை மீன் பிடிக்கும் விசைப் படகுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக மீன்பிடித் துறைமுகம் திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மீன்பிடித் துறைமுகத்தைத் திறந்து வைத்து, 2,000 மீனவர்களுக்கு ரூ.242 கோடியில் நுண்கடன், பாக் நீரிணைப்பு மீனவர்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் ராமநாதபுரம் தங்கச்சிமடம், ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சூரை மீன்பிடித் துறைமுகம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வழங்கும் தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 20 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.1,528 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
நாம் எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்பட்டனர். இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன். தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி. கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால்தான் கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" எனக் கூறியுளார்.












Click it and Unblock the Notifications