பீட்டர் அல்போன்ஸ் கொடுத்த அறிவுரை.. நான் ஓரளவுக்கு பேசக் காரணமே அவர் தான்.. ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!
சென்னை: ஏதோ ஓரளவுக்கு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர் பீட்டர் அல்போன்ஸ் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, ஊக்குவிக்கும் பணியை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் செய்திருக்கிறார். நான் நினைத்துப் பார்க்கிறேன், இப்போது மட்டும் கருணாநிதி இருந்து இந்தக் காட்சியை பார்த்திருந்தால் அவரைவிட மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏதோ ஓரளவுக்கு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கெல்லாம் காரணம் எத்தனையோ பேர் இருக்கலாம். அதில் முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் தான்.
சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்தில் அவர் பேசக்கூடிய பேச்சுக்களை எல்லாம் நான் கேட்பதுண்டு. அவரே பலமுறை என்னிடத்தில் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அமைதியாக உட்கார்ந்துகொண்டு இருக்கக்கூடாது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, ஆளும்கட்சியாக இருக்கும்போதும் சரி, சட்டமன்றத்தில் அவ்வப்போது எழுந்து சில கேள்வியை கேட்கவேண்டும். எனக்கு இப்படிப்பட்ட பல அறிவுரைகளை ஆலோசனைகளை எல்லாம் வழங்கியவர் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ்.
அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். எனவே தலைவர் கருணாநிதியின் இதயத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றவராக விளங்கியவர் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ். அதே அன்போடும், அதே நட்புணர்வோடும் இன்றைக்கு அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடத்திலும் அந்த அன்பை பெற்று வைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோல, அமைச்சர் செஞ்சி மஸ்தானை பொறுத்தவரையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக அவர் ஆற்றி வரும் பணிகளையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய வரலாறு.

சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயலாற்றிடும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அதேநேரத்தில் மாணவர்களிடம் நான் வேண்டுகோளாக வைப்பதெல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு. சமத்துவம் - சகோதரத்துவம் - சமூகநீதி சுயமரியாதை பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட்டைக் கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.
ஒற்றுமையோடு வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மனிதநேயத்தைப் போற்றுங்கள். உங்கள் எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களைப் புறந்தள்ளுங்கள். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications