‘நாங்கள்தான் மாற்று' என்று ஏமாற்ற வருகிறார்கள்.. பதிலடி கொடுப்போம்! திமுகவினருக்கு முதல்வர் அழைப்பு
சென்னை: புதிதாக சிலர் 'நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள் என விமர்சித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்படி வருபவர்களுக்கு நாம் சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் என்றும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை விளக்குகிறறேன். அவர்கள் சாதி கலவரங்களை துண்டி அதை வைத்து மக்களை பிளவுப்படுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை கல்வி கற்க விடமாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள்.

இப்போது தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழி திணிப்பு, பண்பாட்டு திணைப்பு இவற்றையெல்லாம் செய்து, நம்முடைய மாநிலத்தின் தனித்துவத்தையே அவர்கள் அழித்து விடுவார்கள். இதையெல்லாம் நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கிடையில் புதிதாக சிலர் 'நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கும் நாம் பதிலடி தர வேண்டும்.
தொண்டர்களின் நம்பிக்கைதான் கட்சியின் பலம். என் கட்சி, என் இயக்கம், என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் நம்முடைய தொண்டர்கள். நானும், என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்கிற எண்ணம்தான் கட்சியை இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்த இயக்கம் நிலைபெற்று இருக்க காரணமே இந்த அடிப்படைதான். எனவே இந்த அடிப்படையை மேலும் வலுவாக்கும் விதமாக மற்றும் ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.
கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்து உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டால், அவருடைய குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அந்த குடும்பத்துக்கு தலைமை கழகத்தின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் . அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்ப சூழலுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும்.
இது தவிர கட்சியில் தற்போது புதியதாக இரண்டு அணிகளை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஏற்கனவே 23 அணிகள் இருக்கிறது. அத்துடன் இந்த இரண்டு புதிய அணிகளும் இணைந்து பயணிக்கும். இதில் பெரும்பாலான அளவில் நிர்வாகிகள் போடப்பட்டிருக்கிறார்கள். காலியாக இருக்கக்கூடிய பொறுப்புகளில் உடனடியாக இளைஞர்களை நியமனம் செய்யுங்கள். அணிகள் அனைத்துமே தாய் கழகத்துக்கு வலு சேர்க்கதான் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எந்த அளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களா, அந்த அளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும், செயல்பாடுகள் வேகமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தையும் பாஜகவையும்தான் முதல்வர் இப்படி விமர்சித்திருப்பதா அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications