உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. போட்டி போட்டு வரவேற்ற ஸ்டாலின், ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டியலினத்தோரின் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கிய சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், 6 நீதிபதிகள் பட்டியலின இட ஒதுக்கெட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

reservation mk stalin supreme court

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஈ.வி. சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கின் தீர்ப்பின்படி, பட்டியலின எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பட்டிலின இட ஒதுக்கீட்டில், பட்டியலினத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

பஞ்சாபின் உள் ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள், பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

பட்டியல் இனத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில் அருந்ததியினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு செல்லும்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!

முறையாகக் குழு அமைத்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன் வடிவைப் தமிழக சட்டப்பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் கிரீமிலேயரை திணிக்கக்கூடாது என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியலின மக்களிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தவருக்கு சமூகநீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்சநீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கியக் காரணம் ஆகும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டிலேயே வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியதுடன், அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 6% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானமும் இயற்றப்பட்டது.

அப்போது தொடங்கி கடைசியாக 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி 13 அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களுடன் பா.ம.க தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் அவர்களை சந்திக்கச் செய்து, அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்க வைத்தது வரை பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு அளப்பரியது.

தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என கடந்த 2020 ஆகஸ்ட் மாதமே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும், பட்டியலின சமூகங்களிடையே உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 7 பேர் அமர்வில் நிலுவையில் இருந்ததால், அந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அருந்ததியர் இட ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்ற நிலை இருந்தது. இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அருந்ததியர் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேநேரத்தில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்; கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் பட்டியலினத்தவர்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

அதற்கான ஒரு நடவடிக்கை தான் உள் இட ஒதுக்கீடு. அதற்கு மாறாக கிரீமிலேயர் முறை புகுத்தப்பட்டால் அது பட்டியலினத்தவருக்கு சமூகநீதியை மறுப்பதற்கான கருவியாக அமைந்து விடும். எனவே, பட்டியலின, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை கொண்டு வரும் ஆபத்தான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 2022-ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு என மாநில அரசுகளின் உரிமைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்காமல் அனைத்துத் தரப்பினருக்கும் சமூகநீதி வழங்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+