‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள்.. கோ ஆப்டெக்ஸ் மூலம் இன்று தொடங்கி வைக்கும் முதல்வா் விஜய்!
சென்னை: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். 12-ஆவது தேசிய கைத்தறி நாளையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் மூலம் தமிழகத்தில் 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் இன்று முதல் தொடங்கப்படுகின்றன.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு வெற்றித்தறி விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் கைத்தறி பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட உள்ளார். சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

தேசிய கைத்தறி நாளையொட்டி, முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் கைத்தறித் தொழில், ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக, மகளிருக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் இது விளங்குகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தொடா்ந்து, தமிழக நெசவாளா்களின் தயாரிப்புகளை சா்வதேச சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் தேசிய கைத்தறி நாளில் தொடங்கப்படுகின்றன.
இந்த நிலையங்களை நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நெசவாளா்களின் வருமானத்தை உயா்த்துவதுடன், இளம் தலைமுறையினரையும் கைத்தறி ஆடைகளின் பக்கம் ஈா்க்கும்.
கைத்தறி நெசவாளா்களின் உழைப்பை மதித்து, கைத்தறிப் பொருள்களை வாங்கி ஆதரிப்பதன் மூலம் நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாக்கலாம். தேசிய கைத்தறி நாளில் அனைத்து நெசவாளா்களுக்கும் உளமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளாா் முதல்வர் ச.ஜோசப் விஜய்.


Click it and Unblock the Notifications
