மழைக்கு முன்பாக ரெடியாகும் சென்னை.. ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் விஜய்!
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவு பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். ஒக்கியம் மடுவில் மணலை அகற்றி 8 மீ அகலத்துக்கு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (14.10.2026) சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் நீர்வள துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.

தென் சென்னையின் உயிர்நாடி வடிகாலாக ஒக்கியம் மடுவு விளங்குகிறது. தென் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளின் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்து, ஒக்கியம் மடுவு, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் முட்டுக்காடு முகத்துவாரம் வழியாக மட்டுமே கடலைச் சென்றடைகிறது. 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலின்போது இந்த நீர்வழி அடைபட்டதால், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதி மக்கள் பல நாட்கள் தண்ணீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நீர்வளத்துறை ஒக்கியம் மடுவுவை தூர்வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தியுள்ளதுடன், கண்ணகி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க வெள்ள தடுப்புச்சுவர் அமைத்து, கரைகளையும் பலப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக வெள்ள ஓட்டத்திற்கு தடையாக இருந்த, 70 மீட்டருக்கும் குறைவான நீர்வழி கொண்ட காரப்பாக்கம் பாலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் 120 மீட்டர் நீர்வழியுடன் கூடிய அகலமான உயர்மட்ட பாலமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள நீர் தடையின்றி கடலுக்கு செல்ல வழி ஏற்படும்.
பருவமழை முன்னேற்பாடாக, ஒக்கியம் மடுவு, வேளச்சேரி, நாராயணபுரம், ஆதம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஏரிகள், சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள வடிகால்கள் மற்றும் அடையாறு முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் முழுவதும் ஆகாயத்தாமரை, களை செடிகள், வண்டல் மற்றும் மிதக்கும் கழிவுகள், மிதவை இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள உபரிநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ள ஒழுங்கிகளின் மதகு கதவுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளநீர் விரைவாக கடலில் கலக்கும் வகையில் முட்டுக்காடு முகத்துவாரம் மாதந்தோறும் திறந்த நிலையில் பராமரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த ஆய்வின்போது, அனைத்து பணிகளையும் பருவமழை தீவிரமடைவதற்கு முன் விரைந்து முடிக்கவும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கவும், நீர்மட்டத்தை இரவு பகலாக கண்காணிக்கவும், நீர்வளத் துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு. வடநெரே, சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Click it and Unblock the Notifications
