ஆபாச மெசேஜ்.. வரம்பு மீற முயற்சி! கள்ளக்குறிச்சி ஆட்சியர் தவெக MLAக்கு எதிராக புகாரில் சொன்னது என்ன?
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை நாட்களாக புகாரே வரவில்லை என்று அரசுத் தரப்பு கூறி வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அந்தப் புகாரில் என்னென்ன குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட ஆட்சியர் புகாரில் சொல்லி இருப்பது என்ன?
திங்கட்கிழமை பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஒப்படைத்த எழுத்துப்பூர்வமான புகார் மனுவில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் செயல்பாடுகள் குறித்துப் பின்வரும் முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன:
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசுப் பணிகள் தொடர்பாகப் பேசுவதைத் தாண்டி, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக மாவட்ட ஆட்சியர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தேவையற்ற மற்றும் வரம்பு மீறிய குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி மன உளைச்சலும் தொல்லையும் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாய்ந்த பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
மாவட்ட ஆட்சியர் அளித்த இந்த அதிகாரப்பூர்வப் புகாரைப் பெற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதாலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தொடர்புடைய வழக்கு என்பதாலும், மூத்த காவல்துறை அதிகாரிகள் இது குறித்து ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
உயர்நீதிமன்ற விசாரணையும் திடீர் திருப்பமும்
முன்னதாக, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி தொடர்ந்த வழக்கை திங்கட்கிழமை காலை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், "மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காதபோது காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், "தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கோ, காவல்துறைக்கோ ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை" என்று கூறியிருந்தார்.
ஆனால், நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த சில மணி நேரங்களிலேயே, மாவட்ட ஆட்சியர் எஸ்பி-யிடம் நேரில் புகார் அளித்திருப்பது வழக்கின் போக்கையே மாற்றியுள்ளது.
அடுத்தது என்ன?
இதுவரை "நான் மக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை மட்டுமே அனுப்பினேன்.. எந்தத் தவறும் செய்யவில்லை" என எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கூறி வந்தார். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியரே நேரடியாகப் புகார் அளித்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு இன்று (நவம்பர் 24) சமர்ப்பிக்க உள்ள அறிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
