”குஜராத், கர்நாடகாவை பாருங்கள்” மின் கட்டணம் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது.. செந்தில் பாலாஜி விளக்கம்!
சென்னை: குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு அதிமுக, பாஜக, அமமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக மின்சார வாரியத்தின் கடன் சுமை ரூ.1.59 லட்சம் கோடியாகும். ஆண்டுக்கு ரூ. 16,511 கோடி வட்டிக்கட்ட கூடிய சூழல் உள்ளது.

மத்திய அரசின் அழுத்தம்
இதனால் ஆய்வுக் கூட்டத்தில் புதிதாக செயல்படுத்தக் கூடிய திட்டங்கள், விரைவில் வரக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கான மின் உற்பத்தி திட்டங்கள், மேம்படுத்தக் கூடிய பணி ஆகிய கவனத்தில் கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் நிதி நிறுவனங்களும் தொடர்ந்து தமிழக மின்சார வாரியத்திற்கு, மின் கட்டணத்தை உயர்த்தக்கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறைவாக உள்ளது.

7 ஆயிரம் கருத்துகள்
இவற்றை கவனத்தில் கொண்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் பேரில், மின் கட்டணத்தை மாற்றியமைக்க ஆலோசிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 7,338 பேர் மட்டுமே நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் கருத்து தெரிவித்தனர்.

நடவடிக்கைகள்
அதேபோல் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிலைக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான கட்டணங்கள் உயர்வாக இருப்பதாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, உயர்த்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டது.

எவ்வளவு கட்டணம் உயர்வு?
அதேபோல் வீடுகளை பொறுத்தவரை 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.27.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.72. 50 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.4.30 கட்டணமாக வாங்கப்படுகிறது. அதேபோல் குஜராத்தில் முதல் 100 யூனிட்டிற்கு ரூ.5.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சீர்திருத்த நடவடிக்கை
இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் குறைந்த கட்டணமே உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் நிறுவனங்களுக்கும் மின் கட்டணம் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார இணைப்பின் போது கட்டப்படும் நிலைக் கட்டணங்கல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட, சீர்திருத்த நடவடிக்கைகள் தான்.

தொழில் நிறுவனங்களுக்கு கட்டணம்
குறு சிறு நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு 50 பைசா கட்டணம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிலையில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கும் 50 பைசா மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications