கம்யூனிஸ்ட்களை கணக்கெடுங்க.. சொந்த காசில் சூனியம் வைத்த தாசில்தார்! பாய்ந்த ஆக்ஷன்.. விடாத தோழர்கள்
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பாணை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட குறிப்பாணையும் திரும்ப பெறப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இந்த நிலையில் வட்டாட்சியரின் செயல் சட்ட விரோதமானது எனவும், அவரை பணியிட மாற்றம் செய்திருப்பது ஏற்புடையதல்ல, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
-குஜிலியம்பாறை வட்டாட்சியராக அய்யாசாமி என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில், பொதுமக்கள் சந்திக்க வாரத்தில் 4 நாட்களில், பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே அனுமதி, மனு கொடுக்க வருவோர் செல்போன் கொண்டு வரக் கூடாது என நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

மேலும் மக்கள் பிரச்சனைக்காக வட்டாட்சியரை சந்திக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டித்து வட்டாட்சியரை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர்.
இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. தனக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை எடுத்து வட்டாட்சியர் தன்னிச்சையாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் திண்டுக்கல்லில் மட்டுமல்லாது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருப்பவர்களை கணக்கெடுப்பது போல கம்யூனிஸ்ட் கட்சியினரை கணக்கெடுக்க வேண்டிய அவசியம் என்ன என பலரும் கேள்வி எழுப்பினர். ஆளும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
விவகாரம் விபரீதமானதை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க சுற்றறிக்கை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கையை திரும்ப பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்கு அய்யாசாமி வட்டாட்சியர் (பயிற்சி) பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.
கம்யூனிஸ்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த சட்டவிரோதமாகக் குறிப்பாணை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் பயிற்சி முடித்து விடுவிக்கப்பட்டு, சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியேற்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை… pic.twitter.com/g3gTgo3cli
— Shanmugam P (@Shanmugamcpim) August 19, 2026
இந்நிலையில், இந்த நிலையில் வட்டாட்சியரின் செயல் சட்ட விரோதமானது எனவும், அவரை பணியிட மாற்றம் செய்திருப்பது ஏற்புடையதல்ல, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கம்யூனிஸ்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த சட்டவிரோதமாகக் குறிப்பாணை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் பயிற்சி முடித்து விடுவிக்கப்பட்டு, சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியேற்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல!
வட்டாட்சியரின் செயல் சட்டவிரோதமானதும் கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும். மாநில அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சியரின் இந்நடவடிக்கை என்றால், அரசின் அணுகுமுறை மிக, மிக மோசமானது. எனவே, வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
