விஜய்யை குறைத்து மதிப்பிடவில்லை.. இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கு.. சீண்டும் கிரிஷ் சோடங்கர்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிடவில்லை என்றும், அவருக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய கிரிஷ் சோடங்கர், திமுக 25 சட்டசபைத் தொகுதிகளை கொடுக்க முன் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலாக உறவு சுமூகமாக இல்லை. தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு விரும்பிய சூழலில், மற்றொரு தரப்பில் தவெகவை காரணம் காட்டி ஆட்சியில் பங்கு என்று குரல் கொடுக்க தொடங்கியது. இதனை ரசிக்காத ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டார்.

அதேபோல் திமுக தலைமை நேரடியாக சோனியா காந்தியை அணுகி கூட்டணியை இறுதி செய்துவிட்டது. இதன் காரணமாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அமைதி காத்து வருகின்றனர். இதனிடையே நேற்று திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் காங்கிரஸ் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவால் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு குழுவுடன் காங்கிரஸ் குழு சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசித்தது. காங்கிரஸ் கட்சியின் விருப்ப திமுகவிடம் சமர்ப்பித்துள்ளோம். அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்ர நம்பிக்கை உள்ளது. தற்போதைய சூழலில் எங்களின் ஒரே நோக்கம் சட்டசபைத் தேர்தல் தான்.
சட்டசபையில் போதுமான எண்ணிக்கையை பெற்றால், ராஜ்யசபாவுக்கு நேரடியாக நாங்களே எங்களின் உறுப்பினரை பெற முடியும். திமுக தரப்பில் 25 தொகுதிகள் கொடுப்பதாக கூறி இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியால் அதனை ஏற்க முடியாது. எங்களுக்கு தேவையான தொகுதிகளை, அவர்களிடம் கொடுத்திருக்கிறோம்.
அதேபோல் தவெக புதிய அரசியல் கட்சி.. அதனால் அந்தக் கட்சியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.. இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. அவர்களும் காங்கிரஸ் கட்சியின் வலிமையை அங்கீகரிக்கிறார்கள். எங்கள் தலைவர் ராகுல் காந்தியை மதிக்கிறார்கள். தற்போதைய சூழலில் திமுக உடன் மட்டுமே கூட்டணி பேச்சு நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications