அண்ணாமலை வந்தாலே 50 கேமராக்கள் வெயிட்டிங்.. அந்த பொறாமைல பொங்குறாங்கப்பா.. காங். மீது பாஜக அட்டாக்!
சென்னை : காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அழைத்தும் கூட பத்திரிகையாளர்கள் வராமல் புறக்கணிப்பதாலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அலுவலகத்தில் இருந்தாலே 50 கேமராக்கள் காத்திருப்பதையும் கண்டு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக செல்வப்பெருந்தகை இப்படி புலம்புகிறாரா? என பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓரிரு நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். உடனே அவர்களை அவமதிக்கும் வகையில் கோபமாகப் பேசினார் அண்ணாமலை.
செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அண்ணாமலையைக் கண்டித்தார்.
இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் விபி துரைசாமி அறிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலை ஆவேசம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசி அடாவடியாக நடந்து கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து நீங்க எந்த ஊடகம், பெயர் என்ன என்றெல்லாம் அடாவடியாகப் பேசினார். உங்களை யார் இங்கு அழைத்தது, வேண்டுமானால் என்னைப் புறக்கணியுங்கள் என ஆவேசமாகப் பேசினார் அண்ணாமலை. இதற்கு பல்வேறு கட்சியினரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும், பத்திரிகையாளர்களை அண்ணாமலை அவமதித்ததைக் கண்டித்தனர்.

மிக அநாகரீகம்
அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த செல்வப்பெருந்தகை, "அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு என்று அழைத்து தான் ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற நினைவேதுமில்லாமல் மாற்றுக்கட்சியின் தலைவர்களை ஆதாரமற்ற முறையில் தரம் தாழ்ந்து விமர்சித்துவிட்டு, பின் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் நீ என்ன ஊடகம் என்று பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களை கீழத்தரமாக மிரட்டுவதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் ஏற்றுக்கொண்ட தலைவர் மோடியோ பத்திரிகையாளர்களை சந்தப்பதில்லை. இவருக்கோ பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வதில்லை. அண்ணாமலையின் பேச்சுகள், அரசியல் செய்கிறேன் பேர்வழியென்று இவரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக அநாகரீகமாக இருக்கிறது." என விமர்சித்தார்.

எங்கும் நடக்காத செயல்
இந்நிலையில், செல்வப்பெருந்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் செய்தியாளர் கூட்டத்தை புறக்கணிப்பு செய்யுங்கள் என்று பத்திரிகையாளர்களுக்கு, வினோதமான ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு கட்சியின் நிர்வாகி செல்வப் பெருந்தகை மற்றொரு அரசியல் கட்சித் தலைவரின் பத்திரிகையாளர் கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கேட்டுக் கொள்வது, இந்திய திருநாட்டில் எங்கும் நடக்காத செயல்.

யாரையோ மகிழ்ச்சிப்படுத்த
பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல், பொறுமை காக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் எதற்காக பத்திரிகையாளர்கள் கூட்டத்தை அண்ணாமலை கூட்டினார் என்றும் கேட்கிறார். அகில இந்திய கட்சியின், சட்ட மன்ற உறுப்பினராக உள்ள செல்வப்பெருந்தகை, பா.ஜ.கவின் மாநில தலைவரைப் பார்த்து, ஏன் பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டினீர்கள் என்று கேட்பதற்கும், புறக்கணிப்பு செய்யுங்கள் என்று கேட்பதற்கும், செல்வப் பெருந்தகை அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. இது 1975-ஆம் எமர்ஜென்சி காலத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது. யாரையோ மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பது போல உணர்கிறேன்.

50 கேமராக்கள் காத்திருக்கிறது
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அழைத்தும் கூட பத்திரிகையாளர்கள் வராமல் புறக்கணிப்பதாலும், அருமை தலைவர் அண்ணாமலை அலுவலகத்தில் இருந்தாலே 50 கேமராக்கள் காத்திருப்பதையும் கண்டு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி புலம்புகிறாரா? இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகமா? அல்லது பத்திரிகையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையா? எதுவாக இருப்பினும் சம்பந்தமில்லாத விஷயத்தில், ஆளும் கட்சியின் ஆதாயம் கருதி வெளியிடப்பட்டிருக்கும் அரைவேக்காட்டு அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications