"விசிலடிக்கும் கை"! பனையூரில் விஜய் கழுத்தில் காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிவித்த கிரீஷ் சோடங்கர்!
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்த போது அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் பூங்கொத்து கொடுத்து காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தமிழக காங்கிரஸும் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்கள். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவிக்க வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், சோடங்கர், செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை எம்எல்ஏக்கள் குழுத் தலைவர் ராஜேஷ் குமார், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பனையூர் அலுவலகத்திற்கு ஆதரவு கடிதத்துடன் சென்றனர்.
அப்போது அங்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் இருந்தனர். அங்கு வந்த விஜய் ஒவ்வொருவரையும் வரவேற்றார்.
அப்போது விஜய்க்கு சோடங்கர் பூங்கொடுத்து கொடுத்தார். உடனே விஜய் கழுத்தில் காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிவித்தார். பின்னர் விஜய்யும் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை போர்த்தி அவர்களை நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு இரு அமைச்சரவை பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுகவுடன் கூட்டணியில் இருந்து விட்டு தற்போது திடீரென காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் தாவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரும் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் விஜய்யுடன் கூட்டணிக்கு செல்லலாம் என கூறி வந்த நிலையில் சோனியா காந்திதான் திமுகவுடன் கூட்டணி என கண்டிப்புடன் தெரிவித்துவிட்டாராம்.
இந்த நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு குறித்து ஜோதிமணி கூறியிருப்பதாவது: நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது.
அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம்.
இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில் அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில் ,நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ,காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல.
காங்கிரஸ் கட்சியும். தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம்.அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது.
அதே போல எமது தலைவர் ராகுல்காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் பாஜகவின் பாசிச ஆட்சியை ஆட்சியை சமரசமற்று எதிர்த்து வீழ்த்தக்கூடிய வல்லமை உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்பதை நாடறியும். அவரை அவதூறு செய்வது யாராக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கவோ பார்த்துக்கொண்டிருக்கவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அரசியலில் ஏற்கனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும்,புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும்,எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன்னகர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications