”வாளும் இல்லை, படையும் இல்லை.. புலிகேசி வடிவேலு போல் காங்கிரஸ்” கட்சியினருக்கு கேஎஸ் அழகிரி அறிவுரை!
சென்னை: 23ம் புலிகேசி போல் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதாகவும், இனி கட்சியினர் கொள்கை அடிப்படையில் வாழ வேண்டும் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியின் 71வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாபெரும் கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுடன் கேஎஸ் அழகிரி பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் கேஎஸ் அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

பன்வாரிலால் புரோகித் விவகாரம்
அப்போது அவரிடம் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கம்பர், திருவள்ளுவர், ராஜராஜ சோழன், பாரதியார் என பல்வேறு அறிஞர்களால் தமிழும், தமிழ்நாடும் புகழ்பெற்றது. தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவ இது அனைத்தும் ஒரு காரணம். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த அவமானப்பட்டேன் என்று பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். துணைவேந்தர் பதவிகள் ரூ.50 கோடி ஏலம் போவதை சீரமைக்க சிரமப்பட்டேன் என்று பஞ்சாப்பில் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியின் பலன் இதுதான். எதற்காக அதிமுகவினர் தமிழகத்தை கொள்ளையடித்தார்கள் என்று விமர்சித்தார்.

அதிமுக மீது நடவடிக்கை தேவை
தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ அறிக்கை தொடர்பான கேள்விக்கு, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தால், அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டிய தேவையில்லை. உதாரணமாக கனியாமூரில் கலவரம் ஏற்பட்டது. ஆனாலும் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. அதனால் தான் கனியாமூர் கலவரம் விரைவாக தீர்க்கப்பட்டது. அந்த சூழலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டார். தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்ட போது, அரசுக்கு கையாள தெரியவில்லை. அரசின் உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றினார்கள். அதனால் தண்டிக்கப்பட வேண்டியது அன்று இருந்த அரசுதான் என்று தெரிவித்தார்.

பாஜக பற்றி கேஎஸ் அழகிரி
தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடர்பான கேள்விக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பின் போது மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் இப்போது மருத்துவமனை செயல்பாட்டில் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை என்று பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை பிரதமர் மோடியிடன் கொண்டு சென்று நடவடிக்கை எடுத்தால், மக்கள் அவர்களை திரும்பி பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.

கேஎஸ் அழகிரி அறிவுரை
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பற்றிய கேள்விக்கு, 23ம் புலிகேசி போல் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது. நம்மிடம் வாளும் இல்லை, படையும் இல்லை. அதனால் வரக்கூடிய தேர்தல் யுத்த களத்தில் பாஜகவினரை கடுமையாக எதிர்க்க பூத் கமிட்டி அமையுங்கள். கூட்டணியில் ஒரு எம்எல்ஏ, எம்பி சீட் பெற்றுவிடலாம் என கற்பனையில் வாழாமல் இனி கொள்கை அடிப்படையில் வாழ வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
