டெல்லி ஸ்டேஷனில் பரிதவிப்பு.. சென்னை பயணிகள் செய்த தரமான சம்பவம்.. ரயில்வேக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் உள்பட 8 பேருக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கான ஓய்வறை ஒதுக்க ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் ரெயில்வே பிளாட்பாரத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 62 வயதாகும் லட்சுமணன் மற்றும் கடலூர் பெரியகுப்பம் பெட்டோடையைச் சேர்ந்த 52 வயதாகும் ராமு ஆகியோர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "கடந்த 2019-ம் ஆண்டு நாங்கள் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். இந்த பயணத்தின் போது நிஜாமுதீன், அமிர்தசரஸ், சண்டிகர் ஆகிய 3 ரயில் நிலைய ஓய்வறைகளில் தங்கி கொள்வதற்காக நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம்.

அதன்படி, குறிப்பிட்ட தேதியில் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்ற நாங்கள், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஓய்வறையை ஒதுக்கி தரும்படி அங்கிருந்த ரயில்வே பணியாளரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதற்கு குறிப்பிட்ட அதிகாரி, ஓய்வறை முன்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கணினியில் எந்த பதிவும் காண்பிக்கப்படவில்லை என தெரிவித்ததுடன், எங்களுக்கு அறையை ஒதுக்கி தர மறுத்து விட்டார். இதனால் டெல்லியில் வேறு வழியில்லாமல் ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட பொது மேலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "ஏதாவது ஒரு காரணத்தினால் ஓய்வறை ஒதுக்க முடியாமல் போனால் அதற்கான தொகையை திரும்ப வழங்க விதிகள் உள்ளது. அதன்படி, ஓய்வறைக்காக செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து மனுவை விசாரித்த ஆணையம், "அடுத்தகட்ட ரயில் பயணத்தை எளிதாக மேற்கொள்வதற்கு வசதியாகவே ரயில் நிலைய ஓய்வறையை பயணிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். மனுதாரர்களை பொறுத்தமட்டில் ரயில் நிலைய ஓய்வறையை முன்கூட்டியே பதிவு செய்திருந்த நிலையில் அவர்களுக்கு அறை ஒதுக்கப்படாததால் அவர் மிகுந்த சிரமத்தை சந்தித்திருக்கிறார்கள். ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயல் சேவை குறைபாடு மட்டுமல்லாமல் மனுதாரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதால் தென்னக ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார். இதேபோன்று பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஆணையம், அவர்களுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.90 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.20 ஆயிரமும் வழங்க உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications