கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. ஒரண்டை இழுக்கும் தவெக நண்பாஸ்! விஜய்க்கு சிக்கல்! ’அந்த’ கட்சியா?
சென்னை: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஏதாவது ஒரு சர்ச்சை தமிழக வெற்றிக் கழகத்தை சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது. நிர்வாகிகள் விலகல், குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சர்ச்சைக்கு உள்ளான நிர்வாகிகள், பொது இடத்தில் கத்தியோடு பிரச்சனை என அடுத்தடுத்து சிக்கி வரும் நிலையில் விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சி வேண்டுமென்றே இது போன்ற செயல்களில் தங்கள் கட்சியினரை ஈடுபட வைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் அவரது கட்சி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட செயலாளர் நியமனம் என பிஸியாக இருந்தார் விஜய். இடையில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். கட்சியை பொறுத்தவரை ஏற்கனவே ரசிகர் மன்றம் தொடங்கி விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஏராளமான இளைஞர்கள், உள்ளூர் பிரமுகர்கள், வேறு கட்சியிலிருந்து வந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சி ஆரம்பித்தது முதல் தற்போது வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான போது பல குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை, புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் தான் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
சமீபத்தில் விலகிய வைஷ்ணவியும் அதுபோலத்தான் சர்ச்சையை கிளப்பினர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல், புஸ்ஸி ஆனந்த் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கொடிக்கம்பங்களை உடைப்பது, கட்சி கொடியை கிழிப்பது, திமுக உள்ளிட்ட கட்சிகளின் சேர்வது என விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு புறம் இருக்க சமீப காலங்களாக தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் பட்டாக் கத்தியோடு தமிழக வெற்றிக் கழக துண்டோடு வலம் வந்த நபரை பொதுமக்கள் அடித்து துவைத்து காரையும் உடைத்தனர். அந்த நபர் கட்சியை சேர்ந்தவரே கிடையாது என தமிழக வெற்றிக்கழகத்தினர் விளக்கம் அளித்தனர். இது மட்டுமல்லாமல் போதைப் பொருள் கடத்தல் வழக்கு, கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு என தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கினர்.
இது விஜய்க்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். "விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து இது போன்ற நெருக்கடிகள் வரும் என்பது எங்களுக்கு தெரியும். குறிப்பாக ஆளும் தரப்பிலிருந்து எங்களுக்கு ஏராளமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. மாநாட்டு பணிகளை தொடங்கிய போது இடம் தராமல் இழுத்தடித்து, இறுதியாக விழுப்புரத்தில் மாநாடு நடத்தினோம்.
முன்னதாக மதுரை, சேலம், திருச்சி என பல இடங்களில் மாநாடு நடத்த திட்டமிட்டும் அதற்கு உள்ளூர் பிரமுகர்கள் மறைமுக நெருக்கடி கொடுத்தனர். தற்போது ஆன்லைனில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக உறுப்பினர் அட்டையை பெற்றவர்கள், வேண்டுமென்றே பொதுவெளிகளில் அராஜகம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பின்னால் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி உள்ளது. அவர்கள்தான் இதுபோன்று தங்கள் கட்சியினரையே செய்ய வைக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னையில் பெண்களை அழைத்துச் சென்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை கிழித்து விட்டு திமுகவில் இணைந்ததாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. உண்மையில் அந்த நபர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர் கிடையாது. திமுகவைச் சேர்ந்தவர். அவர் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்பட ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக கூறிவிட்டு சில நாட்களில் மீண்டும் அந்த இளைஞர் திமுகவில் இணைந்திருக்கிறார். அவரது தந்தையும் திமுக பிரமுகர்கள் தான். இப்படியாக வேண்டுமென்றே பொதுவெளியில் விஜய்க்கு சங்கடத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறார்கள். 2026 தேர்தலில் மக்கள் இதற்கெல்லாம் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
