விஜய்யின் கொடி பாடல் இந்த பாட்டோட காப்பியா? “மெட்டு அப்படியே இருக்கேப்பா..” ஒப்பிடும் நெட்டிசன்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடலை இன்று வெளியிட்டார் விஜய். இந்தப் பாடல், விஜய் நடித்த வேட்டைக்காரன் பட பாடலின் மெட்டைப் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தவெக கட்சிக் கொடி தொடர்பாக பெரிய விவாதமே நடக்கும் நிலையில், கொடிப் பாடலும் காப்பி என சர்ச்சை வெடித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், பிரமாண்ட மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக-வின் முதல் மாநாடு நடத்தப்பட உள்ளது. பல லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்புடன் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகப்படுத்தி, கொடியேற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடலை வெளியிட்டார் விஜய். விவேக் வரிகளில் தமன் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. "தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது" என்ற வரிகள் இந்தப் பாடலில் வருகின்றன. "சிகரம் கிடைச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு.. நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது" என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.
"அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி".. "தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது" உள்ளிட்ட வரிகள் இந்தப் பாடலில் கவனிக்க வைக்கின்றன. முழுக்க 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பாடல் வீடியோ.

விஜய் வெளியிட்ட தவெக கட்சிக் கொடி பாடல் தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல், விஜய்யின் சினிமா பாட்டு போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் கபிலன் வரிகளில் உருவான பாடலான "நான் அடிச்சா தாங்க மாட்ட.." பாடல் மெட்டிலேயே இந்த கட்சி பாடல் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும் காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தவெக கொடி, ஸ்பெயின் நாட்டின் தேசியக்கொடியை நகல் எடுத்தது போல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் கொடியில் உள்ள யானைகள் படம் பெவிக்கால் லோகோவில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாகவும், கேரள மாநில போக்குவரத்து கழக சின்னத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளதாகவும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications