சமையல் கேஸ் சிலிண்டர் புக் பண்ணியாச்சா? சென்னையில் டெலிவரி லேட்டானால் அவ்வளவுதான்! இதோ புதிய ரூல்ஸ்
சென்னை: தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் செய்யும் ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. விநியோக முறைகேடுகளைத் தடுக்க நாடு முழுவதும் ஏற்கனவே 76 ஏஜென்சிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
தமிழகம் முழுவதும் உள்ள வீட்டு உபயோக வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எந்தவிதமான தாமதமும் இன்றி விநியோகம் செய்ய வேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு முகவர்களுக்கு உத்தரவிட்டுள்ளன..

சமையல் சிலிண்டர்கள்
விநியோகத்தில் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது..
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வாயிலாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.. சில பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்த பின்னரும் விநியோகம் செய்ய முகவர்கள் காலதாமதம் செய்வதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..
எரிவாயு இறக்குமதி இடர்பாடுகள்
இது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய சர்வதேச போர்ச் சூழல் காரணமாக எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்ட சில இடர்ப்பாடுகளால் விநியோகம் பாதிக்கப்பட்டது உண்மைதான்.. ஆனால் தற்போது நிலைமை முழுமையாகச் சீரடைந்து விநியோகச் சங்கிலி பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இப்போதுள்ள சூழலில் வீடுகளுக்கான சிலிண்டர் தேவையை 100 சதவீதம் எங்களால் பூர்த்தி செய்ய முடிகிறது.. அதேபோல வணிக ரீதியிலான விநியோகமும் 70 சதவீதத்திற்கு மேல் சீராகியுள்ளது.. எனவே, முன்பதிவு செய்த கஸ்டமர்களுக்கு சரியான நேரத்தில் சிலிண்டர் சென்றடைவதை முகவர்கள் உறுதி செய்ய வேண்டும்..
சிலிண்டர்கள் பதுக்கினால் அவ்வளவுதான்
சிலிண்டர்களை பதுக்குவதோ அல்லது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதோ போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்" என்று அவர் விளக்கமளித்தார்..
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், நாடு முழுவதும் விதிகளை மீறிய 76 எரிவாயு முகவர்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஏஜென்சிகளும் அடங்கும்.
விநியோகத்தில் வெளிப்படை
விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட ரகசிய குறியீடு (OTP) முறை இப்போது பெரும்பாலான விநியோகங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது.. இந்த முறையை விரைவிலேயே அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.. இதன் மூலம் சிலிண்டர் உரிய வாடிக்கையாளருக்குச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதோடு, முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்..
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகளைச் சந்தித்தால் அல்லது கூடுதல் கட்டணம் கோரப்பட்டால் அது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் புகார் எண்கள் மூலம் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.. புகாருக்கு உள்ளாகும் ஏஜென்சிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், முகவர்கள் இப்போது தங்கள் விநியோகக் கட்டமைப்பை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்..
சிலிண்டர்கள் தட்டுப்பாடு கூடாது
பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லாமல் சிலிண்டர் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எண்ணெய் நிறுவனங்கள் முடுக்கிவிட்டுள்ளன.
முறையான கண்காணிப்பு மற்றும் விரைவான விநியோகம் மூலம் பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.. இனி வரும் நாட்களில் சிலிண்டர் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications