மொத்தமாக குவிந்த கூட்டம்.. தமிழகத்தில் கொரோனா ஸ்பைக் வருமா.. பீதி வேண்டாம்.. ஆறுதல் தகவல் இருக்கு
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் கடைகளில் கூட்டம் அலைமோதியதை, பார்த்து இருப்பீர்கள்.
அய்யய்யோ, இத்தனை கூட்டம் ஒன்றாகக் கூடினால் எத்தனை மடங்கு கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கும் என்று நீங்கள் அச்சப்பட்டு இருக்கக்கூடும்.
பின்ன என்ன.. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குதான் மக்கள் கூட்டம் அலைமோதியது என்றால், பீடா கடைகள் முதல் சோடா கடைகள் வரை திறந்து வைத்திருந்தார்கள். இந்த இரண்டு நாட்களிலும் எவ்வளவு லாபம் பார்க்க முடியுமோ, அவ்வளவு பார்த்துவிடலாம் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சென்னையில் சரிகிறது
அதேநேரம், இதில் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அது என்னவென்றால் , கொரோனா முதலாவது அலையாக இருக்கட்டும், இரண்டாவது அலையாக இருக்கட்டும், கீழே இருந்து அலை மேலே ஏறும்போது, மிகவும் ஆபத்தானது. அது உச்சத்தில் இருக்கும்போதும் மோசமானது. ஆனால், சென்னையை பொறுத்த அளவில் தற்போது அந்த அலை கீழே சரிய தொடங்கியுள்ளது. தட்டையாக்க வேண்டும் என்பார்களே, அந்த கிராப் கீழ்நோக்கி சரியத் தொடங்கியுள்ளது.

அலை குறையும்போது வேகம் குறையும்
இது தட்டை என்ற நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது உண்மைதான். இருப்பினும் அலை அடிக்க துவங்கும்போது நோய் பரவும் வேகத்தைக் காட்டிலும் குறைய தொடங்கும் போது அதன் பரவும் வேகமும் குறைந்துவிடும் என்பதுதான் மருத்துவர்கள் சொல்லும் கருத்து. இதுவரை நாம் கண்கூடாக பார்த்த நிகழ்வுகளும் அப்படித்தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு, கடந்த வருடம் இறுதியில் பண்டிகை காலத்தில் நிறைய மக்கள் ஷாப்பிங் செய்தனர். அப்போது நோய் பரவல் விகிதம் சற்று அதிகரித்தது. ஆனால் பிறகு அதுபோல ஒரே நேரத்தில் ஸ்பைக் என்ற அளவுக்கு கூடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பீதி தேவையில்லை
கண்டிப்பாக, நேற்று மற்றும் நேற்று முன்தினம், கடை வீதிகளில் கூடிய கூட்டம் தேவையற்றது. நோய் பரவல் வாய்ப்பு அதிகரிக்க கூடியதுதான் என்ற போதிலும் கூட, மொத்த மாநிலமும் அழிந்து விடுமோ என்று சிலர் அச்சப்படும் அளவுக்கு நோய்த்தாக்கம் பரவாது என்பது இந்த நோய் பரவலை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. இதுபோல கூட்டங்களுக்குச் சென்றவர்கள் கூடிய அளவுக்கு குடும்பத்தில் மற்றவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளாமல் சற்று விலகி இருப்பது பலன் தரும் என்கிறார்கள்.

கூட்டத்தை பார்த்தால் பயம்
அதேநேரம், ஒவ்வொரு முறையும் கூட்டம் கூடும் போதும், மற்றவர்கள் பயந்து போய் இனி என்ன ஆகும் என்று கவலைப்படும் நிலைமை வராமல் இருக்க வேண்டுமென்றால், தடுப்பூசிகளை அதிக அளவில் மக்கள் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அது ஒன்றுதான் மூன்றாவது அலை அல்லது மற்ற அலைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

தடுப்பூசி முக்கியம்
மேலை நாடுகளில் பல இந்த ஆயத்த நிலைக்கு வந்துவிட்டதால் இப்போது அச்சமில்லாமல் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு முறை கூட்டம் கூடும் போது நாம் அதை பார்த்து பயப்படுவது, பிறகு அப்பாடா என்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்து கொள்ளலாம் என நினைப்பது பலனளிக்காது. கூட்டம் கூடுவதை விட தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான் ஆபத்தானது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் எத்தனை அலைகள் இருந்தாலும் நீங்கள் நீச்சல் அடித்து விளையாட முடியும்.












Click it and Unblock the Notifications