கொரோனா கிளஸ்டர் இல்லை ..ஆக்ஸிஜன் தேவை என்ற அவசியம் இல்லை..சொல்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை : தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் இன்று முதல் 2 நாட்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.
இதேபோன்று கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமான கொரோன பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சராசரியாக நாடு முழுவதும் 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மாத்திரை மருந்து கையிருப்பு, தனிநபர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். அன்றாடம் 500 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு 150 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. அதுபோல் பிபிடி கிட்கள், மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை.கொரோனா பாதித்த அனைவரும் வீட்டிலேயே மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் தென்படுவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மருந்து இருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனியே பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 24,500 ஆக்சிஜன் வெண்டிலேட்டர்கள் உள்ளன. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications