பறந்த உத்தரவு.. இதோ அடுத்த "குறி".. சிக்க போகும் "சேலம்".. தள்ளுபடியில் ஊழலா.. பரபர ஆர்டர்!
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் ஊழலா என்று விசாரணை நடக்கிறது
சென்னை: வேலுமணிக்கு எதிராக புகார்கள் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த புகார் சேலத்தை நோக்கி திரும்பி உள்ளது.. அதற்கான ஒரு அறிவிப்புதான் சுற்றறிக்கையாக இன்று பறந்துள்ளது.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் அதிகம் பேசப்பட்டது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள்தான்.. அதிலும் ஆட்சியின் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அதிலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிலும் பயிர்க்கடன் உத்தரவுதான் மக்களிடம் பெரும் நன்மதிப்பை பெற்று தந்தது.
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் 2021 ஜனவரி 31ம் தேதி வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதில் அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்பில்தான் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

தள்ளுபடி
அதாவது, பல சங்கங்களில் கடந்த ஜனவரி 31க்கு பிறகு வழங்கப்பட்ட நகைக் கடன்கள் முன்தேதியிட்டு பயிர்க்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.. பயிர்க்கடன் வழங்காத காலங்களில் வழங்கப்பட்ட பிற கடன்களையும் பயிர் கடன்களாக மாற்றியுள்ளனர்.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில்தான் அதிக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாய நகைக்கடன்
அதுமட்டுமல்ல, பயிர்க்கடன் வழங்காத காலங்களில் வழங்கப்பட்ட பிற கடன்களையும் பயிர் கடன்களாக மாற்றியது, சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், கூட்டுறவு சார்பதிவாளர் குழு ஏற்க மறுத்த பட்டியலை மேல் முறையீட்டின் பேரில், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது, சங்கங்களில் நிதி இல்லாததால் கடன் தாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யாமல் பயிர்க்கடன் அல்லது விவசாய நகைக்கடன் வழங்கியது, கடன் வழங்காமல் வைப்புத் தொகையாக மாற்றியது போன்ற முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றறிக்கை
எனவே, மீண்டும் வெளி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஜூலை 15ம் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலை 100 சதவீதம் மறுஆய்வு செய்ய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "2021ஆம் ஆண்டிற்கான பயிர்க்கடன் பயனாளிகள் பட்டியலை வெளி மாவட்ட அலுவலர்கள் குழு 100 சதவீதம் மறு கூராய்வு மேற்கொண்டு அந்த அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் சரக கூட்டுறவு துணைபதிவாளரிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலாய்வு
துணை பதிவாளர்கள் சரக வாரியாக அறிக்கையின் அடிப்படையில் 5 சதவீதம் கடன்களையும், மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்கள் 5 சதவீதம் கடன்களையும் மேலாய்வு செய்ய வேண்டும். வெளிமாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்களை கொண்டு இந்த மேலாய்வு செய்ய வேண்டும். எந்த சங்கத்தில் மறு கூராய்வு முடியவுள்ளதோ, அந்த சங்கத்தின் தள்ளுபடி பட்டியலை விரைந்து தணிக்கை மேற்கொள்ள ஏதுவாக தொடர்புடைய சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனருக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்.

வேலுமணி
இறுதி அறிக்கையினை தொடர்புடைய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோர் கையொப்பமிட்டு வரும் 31ம் தேதிக்குள் பதிவாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்... முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் விசாரிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ள நிலையில், சேலத்தை நோக்கி அடுத்த குறி பாய்ந்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications