ஜெயிச்சுட்டாங்க நடிகை சுகன்யா..சன் டிவிக்கு 10 லட்சம் ஃபைன்! நக்கீரன் கோபால் வீடியோவால் வந்த சிக்கல்
சென்னை: நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், சன் டிவி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சுகன்யா, 1990-களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர். இந்த நிலையில், 1996-ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நடத்தப்பட்ட பேட்டி தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை அவரை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றது.

1996-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், வீரப்பனை நேரில் சந்தித்து நீண்ட நேர பேட்டி எடுத்தார். அந்த பேட்டியின் சில பகுதிகள் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது நடிகை சுகன்யாவை பற்றிய அவதூறான கருத்துகளும் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
நடிகை சுகன்யா
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறிய சுகன்யா, சன் டிவி மற்றும் நக்கீரன் கோபால் மீது இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, சன் டிவி தரப்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டது. வீரப்பன் பேட்டியை ஒளிபரப்புவதற்காக நக்கீரன் கோபால்தான் தங்களை அணுகியதாகவும், யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் வாதிடப்பட்டது.
நக்கீரன் கோபால்
ஆனால் இதற்கு பதிலளித்த நக்கீரன் கோபால், வீரப்பனுடன் நடத்தப்பட்ட சுமார் 9 மணி நேர வீடியோ பதிவை சேனலுக்கு வழங்கியதாகவும், அதில் சுமார் 4 மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஒளிபரப்புக்கு முன்பு எந்த பகுதிகளை வெளியிட வேண்டும், எந்த பகுதிகளை நீக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் சன் டிவிக்கே இருந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
சன் டிவி
இந்த வாதங்களை ஆய்வு செய்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், நடிகை சுகன்யாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஒளிபரப்புக்கு முன்பு அவதூறான தகவல்களை நீக்குவதற்கும், திருத்துவதற்கும் முழு அதிகாரம் இருந்தபோதிலும், அதை செய்யாமல் வெளியிட்டது சன் டிவியின் தவறு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி, நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சன் டிவிக்கு உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சன் டிவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிபதி, சன் டிவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். தீர்ப்பில், ஒளிபரப்புக்கு முன்பு உள்ளடக்கத்தை ஆய்வு செய்து, அவதூறான பகுதிகளை நீக்கும் அதிகாரம் சேனலுக்கு இருந்தது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். அந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற தீர்ப்பு
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கும் அறிவிப்பை சன் டிவி தனது சேனலில் வெளியிடாமல், வேறு ஒரு பத்திரிகையில் மட்டும் வெளியிட்டது ஏன் என்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அவதூறான நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்களிடம் மன்னிப்பு அல்லது விளக்கம் சென்று சேர வேண்டுமெனில், அதே தொலைக்காட்சி தளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். வேறு ஊடகத்தில் வருத்தம் தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என்றும் குறிப்பிட்டார். சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றமும் நடிகை சுகன்யாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications