ஆசியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு.. "பீதியடைய வேண்டாம்" - தமிழ்நாடு சுகாதாரத்துறை
சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தையே வாட்டி எடுத்த கொரோனா பெருந்தொற்று, தற்போது மீண்டும் பீதியை கிளப்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.
உலகமே கடந்த சில மாதங்களாகத்தான் இந்த பெரும் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இப்படி இருக்கையில் மீண்டும் தொற்று பாதிப்பு குறித்த அச்சம் ஆசியாவின் சில நாடுகளில் ஏற்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

குறிப்பாக சீனாவின் ஹாங்காங் நகரில் இந்த தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுமார் 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில், தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாதம் முதல் வாரத்தில் பதிவாகியுள்ள எண்ணிக்கை, இந்த ஆண்டின் மிகப்பெரிய எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக பரிசோதனையை அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது.
பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாதிரிகள் பாசிட்டிவ் என வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சாதாரண மக்களை போலவே பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அந்நாட்டின் பிரபல பாப் இசை பாடகரான இசன் சான் உள்ளிட்டோரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இசை கச்சேரிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
சீனாவை போலவே, சிங்கப்பூரிலும் தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையின்படி தொற்று பாதிப்பு 14,200 என்கிற அளவில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதனால் மருத்துவனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் சுமார் 30% வரை அதிகரித்திருக்கிறது.
சர்வதேச அளவில் மீண்டும் தொற்று பரவல் தீவிரமெடுத்து வரும் நிலையில், தமிழகத்திலும் இது குறித்து அச்சம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்" என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications