"நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை நீக்கவேண்டும்" சென்னை ஐகோர்ட் முன் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!
சென்னை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் (டிசம்பர் 3) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயில் இணை ஆணையர், மதுரை மாநகரக் காவல் ஆணையர் இருவரிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடத்தினார்.
இதில், 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், இந்து அமைப்புகள் மற்றும் மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பினர் இடையே ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை காரணமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் ரவிக்குமார் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். உத்தரவை அடுத்து, ரவிக்குமார் உள்பட 10 பேர், 67 மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் மலை உச்சியில் தீபம் ஏற்றச் சென்றனர். ஆனால், காவல்துறை அனுமதி வழங்காததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சூழலை கருத்தில் கொண்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் திருப்பரங்குன்றம் மலை பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை அழைத்துச் சென்று தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.
நீதிக்குப் புறம்பான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இன்று காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நீதிபதியின் உத்தரவை விமர்சித்த சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "திருப்பரங்குன்றத்தில் மாநில அரசின் உறுதியான நடவடிக்கையால் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், CISF வீரர்களை அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வன்மையாக கண்டனத்திற்குரியது.
CISF வீரர்களை நீதிமன்ற பாதுகாப்பு தவிர மற்ற பணிகளில் ஈடுபடச் செய்வது அத்துமீறிய செயல். நீதிபதி தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் நீதிபதியாக நீடிப்பதற்கு தகுதியற்றவர். எனவே, அவர் மீது தலைமை நீதிபதி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆதாரத்துடன் புகார் அளிப்போம் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications