டவ்தே புயலின் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை :அரபிக் கடலில் உருவாகியிருக்கும் டவ்தே புயலின் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள 'டவ்தே' புயல் காரணமாக குஜராத் மற்றும் டையூ கடலோரப் பகுதிகளுக்கு உச்சக்கட்ட புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என்று நேற்று இரவு இந்திய வானிலை ஆய்வுமையம் கூறியிருந்தது. அதன்படி உருவான புயல் தற்போது வடமேற்கு திசையில் பயணித்து வருகிறது.

மே 18ம் தேதி கடக்கும்
தற்போது கர்நாடகா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் பயணித்து வருகிறது. இந்த புயல் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலில் வடமேற்கு திசையில் பயணித்து குஜராத் அருகே மே 18ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எந்த இடத்தில் கடக்கும்
அதாவது 'டவ்தே' புயல் மே 18 ஆம் தேதி பகல் / மாலைக்குள் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் நாலியா ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்கும் போது காற்று வீசலாம் என கூறப்படுகிறது.

வானிலை மையம்
இதனிடையே இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 12 மணி நேரத்தில் இந்தப் புயல் தீவிரப் புயலாக மாறும் என்றும், அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாக மாறும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் தாக்டே புயல் காரணமாக கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கரையோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தன் காரணமாக அந்த பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மிக கனமழை பெய்யும்
இதனிடையே டவ் தே புயலின் காரணமாக தமிழகத்தின் எந்த பகுதிகளில் எல்லாம் கனமழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
