ராமர், சீதை பற்றி இழிவு பேச்சு.. பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது 5 பிரிவில் பாய்ந்த வழக்கு!அதிரடி
சென்னை: ராமர், சீதை உள்பட இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனரான விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித். இவரிடம் உதவி இயக்குனராக சிலர் பணியாற்றி வருகின்றனர். கவிஞர் விடுதலை சிகப்பி என்பவரும் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

மேலும் இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி சென்னை அபிராமபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரங்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் குறித்து சில கருத்துகளை எடுத்துரைத்தார். மேலும் அவர் இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் தான் விடுதலை சிகப்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கோரிக்கைகள் வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக தான் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிகப்பி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் விடுதலை சிகப்பி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதாவது இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் உள்ளிட்ட கடவுள்கள் பற்றி விடுதலை சிகப்பி இழிவாக பேசியுள்ளார். இவரது பேச்சு இந்து மதத்தை பின்பற்றுவோரை புண்படுத்தும் வகையிலும், நம்பிக்கையை சீர்க்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின் அடிப்படையில் சென்னை அபிராமபுரம் போலீசார் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications