தப்புங்க.. அந்தரங்கங்களில் தலையிடாதீங்க! நெப்போலியன் மகன் கல்யாணத்தை புகழ்ந்து மாஜி டிஜிபி வீடியோ
சென்னை: தந்தைகளுக்கு எல்லாம் தலையாய தந்தை தான் நெப்போலியன். இப்படியான ஆட்களை இந்த காலத்தில் பார்க்க முடியாது. மகனுக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனார். அவரது விருப்பப்படி திருமணம் செய்து வைத்தார். அக்சயா - தனுஷ் விரும்பி தான் கல்யாணம் செய்துள்ளனர். அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் நாம் தலையிடக்கூடாது'' என்று ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி ரவி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகராக இருந்த நெப்போலியன் அதன்பிறகு அரசியல்வாதியாக மாறினார். மத்திய அமைச்சர் பதவியையும் வகித்தார். தற்போது அவர் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியனின் இந்த முடிவுக்கு அவரது மூத்த மகன் தனுஷ் தான் காரணம்.

தனுஷ் சிறுவயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரால் எழுந்து நடக்க முடியாமல் உள்ளார். தனுஷின் சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறைக்காக நெப்போலியன் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார். தனுஷிக்கு தற்போது 25 வயது ஆகிறது.
இந்நிலையில் தான் தனுஷ் மற்றும் அக்சயா என்ற 21 வயது பெண்ணுக்கும் ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அக்சயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மூலக்கரைப்பட்டி தான். ஜப்பானில் நடந்த இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்றனர். தனுஷ் - அக்சயா திருமணத்தை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மகனின் ஆசையை நிறைவேற்றி வரும் நெப்போலியனையும் புகழ்ந்து வருகின்றனர்.
அதேவேளையில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த திருமணம் தேவையில்லாது. நடிகர் நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கிறார் என்று கடினமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் நெப்போலியன் மற்றும் அவரது மகன் தனுஷ் திருமணத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி ரவி முக்கிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். அதில் ஓய்வு பெற்ற மாஜி டிஜிபி ரவி கூறியுள்ளதாவது:
தம்பி தனுஷ் திருமணத்துக்கு நான் ஜப்பானுக்கு சென்றிருந்தேன். தந்தைகளுக்கு எல்லாம் தலையாய தந்தை யாருனு சொன்னால் நெப்போலியன் தான். பிரெஞ்சு அரசன் நெப்போலியனை மாவீரன் என்று சொல்வார்கள். நம்முடைய நெப்போலியனை பொறுத்தவரை மிகப்பெரிய மாமனிதர். நல்ல மனிதர். இப்படியான ஆட்களை இந்த காலத்தில் பார்க்க முடியாது. தனது மகனுக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனார். அவரது விருப்பப்படி திருமணம் செய்து வைத்தார்.
இருமணங்களும் ஒருங்கிணைவது தான் திருமணம். அப்படியொரு பெண்ணும், ஆணும் விரும்பித்தான் கல்யாணம் செய்தனர். இதை ஒரு சிலர் விமர்சனம் செய்கின்றனர். இது தேவையில்லாதது. அமெரிக்காவில் நடத்தினால் ஏன் அங்கு நடத்தினார்? என்று கேட்கின்றனர். இந்தியாவில் நடத்தினால் அஅமெரிக்க சிட்டிசன் இங்கு வந்து ஏன் நடத்துகிறார்? என்றும், அமெரிக்கா சிட்டிசன் ஜப்பானில் திருமணம் நடத்துகிறார்? அதனை ஏன் இந்தியாவில் நடத்தக்கூடாது? என்று வசைப்பாடுபவர்கள் பாடுபவர்கள் வசை பாடி கொண்டே இருப்பார்கள். அவர்களை பற்றி நாம் கவலைப்பட கூடாது.
அதுபோல் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் நாம் தலையிடக்கூடாது. ஒருசில யூடியூப் சேனல்கள் எல்லாம் கண்டபடி பேசுகின்றன. இது தவறு. நெப்போலியன் நீடோடி வாழ வேண்டும். அவர் தனது மகன் திருமணத்துக்கு மிகப்பெரிய ஆட்களை எல்லாம் கூப்பிடவில்லை. சாதாரண லைட் பாய், கேமராமேன், தன்னுடன் உடன் இருந்தவர்கள், உதவி செய்தவர்கள், மேக்கப்மேன்களை மறக்காமல் அங்கு கூட்டி வந்து வரவேற்று உபசரித்து வழியனுப்பிய மாமனிதன் தான் நெப்போலியன். அக்சயா - தனுஷ் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications