தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கத் தடை..முதல்வர் நல்ல முடிவெடுப்பார் - சேகர்பாபு சொன்ன செய்தி
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் ஆதீனத்துடன் முதல்வர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என கூறினார்.
Recommended Video
பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதினத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார் என கூறினார். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள் என கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

தடைக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மதுரை ஆதீனம்
இந்நிலையில்,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.மேலும்,அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் எனவும் மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.

சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம்
இந்நிலையில்,தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி பழம் பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நடைபெற்று வருவதாக கூறினார்.

பாரம்பரிய நிகழ்ச்சி
பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலயே வசித்து வருபவர்கள். தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வு. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மிக நிகழ்வு என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என்று பேட்டியளித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்
பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்டதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர். மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் ஆதீனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications