சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசியில் தமிழை வளர்த்ததா பாஜக?! - உண்மையில் நடப்பது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காகத் தயாரான சுவரொட்டிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, நெட்டிசன்கள் பலரும் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கான அறிவிப்புப் பலகைகளில் தப்பும் தவறுமாக தமிழ் வார்த்தைகள் அச்சாகியுள்ளன. அது தொழில்நுட்பக் கோளாறு என்றாலும் அதைச் சரி செய்த பின்னர் தானே வெளியிட வேண்டும்?

உபியில் திருவள்ளுவர் சிலை.. தடுக்கும் பாஜக! அப்ப காசி-தமிழ் சங்கமம்? பாயிண்டை பிடித்த செந்தில்குமார்உபியில் திருவள்ளுவர் சிலை.. தடுக்கும் பாஜக! அப்ப காசி-தமிழ் சங்கமம்? பாயிண்டை பிடித்த செந்தில்குமார்

 காசி யாத்திரையா.. காவி யாத்திரையா?

காசி யாத்திரையா.. காவி யாத்திரையா?

தமிழுக்காக ஏற்பாடான அந்த நிகழ்ச்சியில் இந்தி சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதைத்தான் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

காசியில் இப்படியொரு நிகழ்வை ஒருங்கிணைத்தபோதே, 'தமிழ்நாடு அரசை ஏன் அழைக்கவில்லை?' என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கூட நிகழ்ச்சியில் பாடப்படவில்லை. இது தமிழ்ச் சங்கமம் அல்ல; தமிழை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி' என்று காரசாரமாக விமர்சனம் செய்திருந்தது.

பாஜகவின் தமிழ் வளர்ப்புத் திட்டம் குறித்து, 'திராவிட சிந்தனையாளர்' நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். அவர், வழக்கமான பாணியில் எதுகை, மோனையாக சில கருத்துகளை முன்வைத்தார்.

"பிரதமர் மோடிக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கின்ற உறவை மோடி சொல்லி தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய நிலையில் இல்லை. தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திருமண நிகழ்ச்சிகளில் 'காசி யாத்திரை' என்று ஒரு தனி வைபவமே உண்டு.

ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி அங்கிருந்து காசிக்குச் சென்று அங்கு மண்ணைக் கரைத்துவிட்டு, மீண்டும் கங்கையிலிருந்து நீர் கொண்டுவந்து ராமேஸ்வரத்துக்கு வந்து வழிபட்டால்தான் அந்தப் புனித யாத்திரை நிறைவு பெறுவதாக அர்த்தம். இந்தச் சடங்கைத் தமிழர்கள் காலங்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

'சகலகலாவள்ளி' தந்த குமரகுருபரர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், மகாகவி பாரதியார் போன்ற பலர், காசியில் வாசம் செய்தது மட்டுமல்ல; அங்குள்ள விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் அவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

 வள்ளுவர் சிலை முடங்கிக் கிடப்பது ஏன்?

வள்ளுவர் சிலை முடங்கிக் கிடப்பது ஏன்?

தமிழ்நாட்டில் பல திருக்கோயில்களில் காசி விஸ்வநாதருக்கு என்றே தனி சன்னதி உண்டு. விசாலாட்சி அம்மாளுக்கும் தனி சன்னதி உண்டு. நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் காசி யாத்திரையைத் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தியவர்கள். நகரத்தார் சமுகத்துக்கு என்றே காசி கங்கைக் கரையில் தனி மண்டபமே உள்ளது.

இப்படி காசிக்கும் தமிழர்களுக்கும் கடந்த காலத் தொடர்புகள் நிறைய உள்ளன. ஆனால், இன்றைக்கு ஏதோ திருக்குறளைத் தூக்கிப் பிடிப்பதைப் போலவும் காசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மாதிரியும் திசை திருப்பும் வேலைகள் நடக்கின்றன.

ஆனால், இதே கங்கை நதிக்கரை ஓரத்தில் பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு 'வான்புகழ்' வள்ளுவன் சிலை, ஒரு அநாதையைப் போல் கிடக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியும் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கிறது.

நாக்குக்கும் வாக்குக்கும் வசப்படாத வெறும் 24 ஆயிரம் பேர் பேசக்கூடிய சம்ஸ்கிருத மொழிக்கு 630 கோடி ரூபாயை செலவழிக்கிறார்கள். உலகத்தில் கிளாசிக்கல் மொழியாக தமிழ் உள்ளது. ஒரு மொழி செம்மொழி அங்கீகாரம் பெறுவதற்கு 11 தகுதிகள் இருக்க வேண்டும். அந்த 11 தகுதியும் கொண்ட ஒரே மொழி தமிழ். ஆனால், தமிழ் மொழிக்கு வெறும் 23 கோடி ரூபாயை செலவழிக்கிறார்கள்.

காசியில் இப்படி ஒரு சங்கமம் நடத்தக் கூடியவர்கள் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்தார்களா? அந்த நிகழ்ச்சியில் யாராவது தமிழில் பேசினார்களா? பாடிய இளையராஜாவாவது ஒரு தமிழ்ப் பாடலையாவது பாடினாரா? ஆகவே காசியில் நடந்தது தமிழ்ச் சங்கமம் அல்ல; அது காவி சங்கமம்" என்கிறார் நாஞ்சில் சம்பத்.

அடுத்து, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனிடம் பேசினோம். "பொதுவாக, தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் போகின்றவர்கள் அங்கே எதையாவது விட்டுவிட்டு வருவது வழக்கம். இதைக் காலங்காலமாக தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

ஏனென்றால் இல்லறத்தில் ஈடுபட்டு வரும் ஒருவன், துறவறம் மேற்கொள்வது கடினம். ஆகவே, அதற்கான தொடக்கமாக தனக்குப் பிடித்த ஒன்றை அங்கே விட்டுவிட்டு வருவார்கள்.

 வடக்கே ராமர்; தெற்கே முருகன்

வடக்கே ராமர்; தெற்கே முருகன்

காசியில் எதனைவிட்டு வர வேண்டும் என்றால், இலைகளில் ஒன்று, காய்களில் ஒன்று, பூக்களில் ஒன்று என ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு வர வேண்டும். எங்கள் மாமா ஒருவர் இருந்தார். அவருக்கு மாம்பழம் என்றால் உயிர். அவர் என்ன செய்தார் என்றால், காசிக்குப் போய் மாம்பழத்தை விட்டுவிட்டு வந்தார். அப்படித் தான் நேசித்த ஒன்றை விட்டுவிட்டு வந்தார். என் தாத்தா, வாழை இலையை விட்டுவிட்டு வந்தார்.

ஆனால், இப்போது காசியில் என்ன நடக்கிறது தெரியுமா? காசியில் நாம் விட்டுவிட்டுப் போக வேண்டிய பொருள் என்று சிலவற்றை வைத்துள்ளார்கள். அதில் உள்ள எதையும் நீங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தாத பொருளாக இருக்கும். அதைத்தான் எல்லோரும் விட்டுவிட்டு வருகிறார்கள். அதுபோல, பாஜகவினர் வாழ்நாளில் எப்போதும் பயன்படுத்தாத தமிழை விட்டுவிட்டு வருகிறார்கள்.

அவர்கள் உபயோகப்படுத்தாத பொருள் தமிழ்தான். எனவே, அதைவிட்டுவிட்டு வருகிறார்கள். எனக்கு இன்னொரு கேள்வி எழுகிறது? இவர்கள் காசியில்தான் தமிழ் வளர்ப்பர்களா? காஞ்சிபுரத்தில் வளர்க்க மாட்டார்களா? திருப்பூரில் வளர்க்க மாட்டார்களா? அது என்ன காசியில் போய் தமிழை வளர்ப்பது?

காசியில் தமிழ் வளர்ப்பதாக இருந்தால் மூடிக்கிடக்கும் வள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டியதுதானே? பல வருடமாக மூடப்பட்டு மூலையில் வைக்கப்பட்டுள்ளதே? பாரதிக்கு ஒரு சிலை எழுப்பலாமே? அதை ஏன் செய்யவில்லை? அதைவிட்டுவிட்டு ஏன் தப்பும் தவறுமாகத் தமிழை எழுதி, நோகடிக்கிறீர்கள்? முதலில் நீங்கள் தமிழை வளர்க்க வேண்டாம், தமிழைப் படியுங்கள் போதும்.

தமிழ்நாட்டை மையமாக வைத்து என்ன செய்யலாம் என்று பாஜக தடுமாறுகிறது. அதன் வெளிப்பாடுதான் காசி தமிழ்ச் சங்கமம். இந்தியா முழுவதும் ராமர் பேரைச் சொல்கிறவர்கள், தமிழ்நாட்டில் முருகன் பெயரைச் சொல்கிறார்கள். ஏனென்றால், ராமர் பெயரைச் சொன்னால் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதுதான் காரணம்" என்கிறார்.

''காசியில் தமிழ்ச் சங்கமம் என்பது உண்மையில் தமிழைப் பற்றி அறியாதவர்கள், தங்கள் மீது படிந்துள்ள காவி சாயத்தை மறைப்பதற்காகச் செய்யும் ஒரு நிகழ்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன்.

அவர்கள் தயாரித்து வெளியிட்டுள்ள துண்டறிக்கைகளில்கூட தமிழ் சரியாக எழுதப்படவில்லை. தவறாக அச்சடித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். அவைதான் சமூக வலைத்தளங்களில் இன்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழை வளர்க்கக் காசிக்குத்தான் அழைத்துப்போக வேண்டும் என அவசியமே இல்லை'' என்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவரும் ஊடகப் பிரிவின் தலைவருமான ஆ.கோபண்ணா.

 அண்ணாமலைக்கு ஏன் அழைப்பு?

அண்ணாமலைக்கு ஏன் அழைப்பு?

தொடர்ந்து நம்மிடம் பேசிய கோபண்ணா, ''தமிழை வளர்ப்பதாகக்கூறி வர்ணாஸ்ரம கொள்கைகளையும் வகுப்புவாத கொள்கைகளையும் பரப்பவே இதைச் செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுதான் இந்தப் பயணத் திட்டம்.

காசி தமிழ்ச் சங்கமத்துக்குச் செல்வதற்கான ரயில் பயணத்தை ஆளுநர் ரவி கொடியசைத்து அனுப்பி வைக்கிறார். அவர் பக்கத்தில் தமிழ் அறிஞர்கள் என்று யாரும் இல்லை. பாஜக நிர்வாகிகள்தான் இருக்கிறார்கள். இது தமிழக பாஜகவின் ரயில் பயணம். அதில் தமிழர்களின் பங்களிப்பு என்பது துளியும் கிடையாது. சொல்லப்போனால், இது பாஜக சங்கமம்" என்கிறார்.

''காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் யாரையும் அழைக்கவில்லை. இது மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சி. அதனால், மத்திய அமைச்சர் எல்.முருகனை அழைக்கிறார்கள். ஆனால், பொன் ராதாகிருஷ்ணனையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் ஏன் அழைத்தார்கள்?'' எனக் கேள்வியெழுப்புகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பேராசிரியர் அருணன்.

தொடர்ந்து பேசிய அவர், ''மத்திய அரசின் பணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாநில அரசின் பிரதிநிதிகளை அழைக்காமல், பாஜகவினரை பிரதமர் ஏன் அழைக்கிறார்? அரசின் வரிப் பணத்தில் நிகழ்ச்சி நடத்துவது சரியா? தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகக் கொண்டுவர இவர்களால் முடியவில்லை.

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடும் மொழியாகக் கொண்டு வந்துவிட்டார்கள். தமிழ் மீது இவ்வளவு பிரியம் காட்டுகிறவர்கள், இதனை ஏன் செய்யவில்லை?"என்கிறார் அருணன்.

English summary
Tamil groups are against kasi tamil sangamam controversy: All things to know about kasi tamil sangamam controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X