ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கு வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதால் அதிமுக மோதல் விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
சட்ட ரீதியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என இரு வாய்ப்புகள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் கைவிட்டாலும், தேர்தல் ஆணையத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் ஓபிஎஸ்.
இதற்கு ஆதாரமாக ஓபிஎஸ் வைத்திருப்பது மூன்றாது வாய்ப்பான பாஜக மேலிடத்தை. பாஜக மேலிட ஆதரவு மட்டும் இருந்துவிட்டால், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தனக்குச் சாதகமாகவே செயல்படும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
எனினும், நான்காவதாக ஒரு பிடியையும் கையில் வைத்திருக்கிறாராம் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அது என்கிறார்கள்.
பாறையில் நட்ட மரம்! ரூ.50 லட்சம் அபேஸ் புகார்.. அதிமுக 'மாஜி’ திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம்!

அதிமுக சிக்கல்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வழக்கு செப்., 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணை செல்லும் திசையே, பாஜக மேலிட ஆதரவு யாருக்கு என்பதை உணர்த்தி விடும் என்றும் கணிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஓங்கிய ஈபிஎஸ் கை
இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதாவது, முதல் முறை ஜூன் 23ல் பொதுக்குழுவை நடத்த ஈபிஎஸ்ஸுக்கு அனுமதி கிடைத்தது. அடுத்து, புதிய தீர்மானங்களைக் கொண்டு வரக்கூடாது என நிபந்தனை பெற்றார் ஓபிஎஸ். அதன்பிறகு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதி பெற்று பொதுக்குழுவைக் கூட்டினார் ஈபிஎஸ். அந்தப் பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக ஒற்றை நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், உடனே மேல்முறையீடு செய்து தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றார். இந்நிலையில் தான் வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லியில் 3
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், உச்ச நீதிமன்றமும், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையமும் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. விவகாரம் டெல்லிக்கு சென்றுவிட்டதால் இனி முடிவெடுக்க வேண்டிய நிலைமை இருப்பது டெல்லியில் உள்ள 3 கைகளில் இருக்கிறது. 1. உச்சநீதிமன்றம், 2. தேர்தல் ஆணையம், 3.பாஜக தலைமை. இதற்காகவே, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே பாஜகவின் கவனத்தை ஈருக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி சந்திப்பு
கடந்த வாரம் தனது சகாக்களோடு டெல்லிக்குச் சென்ற அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரம், 2024 தேர்தல் திமுக ஆட்சி, சட்டம் - ஒழுங்கு குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதில், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு எதிரான சில நகர்வுகளையும் செய்ததாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கையான பதில்
எனினும், டெல்லி தனக்கு சாதகமாகவே இருப்பதாக நம்புகிறாராம் ஓ.பன்னீர்செல்வம். டெல்லி மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வரும் ஓபிஎஸ், நம்பிக்கையான பதில்களையே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழக்கிலும், தேர்தல் ஆணையத்திலும் தமக்குச் சாதகமான முடிவே வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தனது ஆதரவாளர்களிடமும், டெல்லி கொடுத்த நம்பிக்கை பற்றியும் கூறியுள்ளாராம்.

பிரம்மாஸ்திரம்
உச்ச நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும், பாஜகவால் தங்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டாலும் இன்னொரு முக்கியமான அஸ்திரத்தையும் ரகசியமாக வைத்திருக்கிறாராம் ஓபிஎஸ். அதாவது, முன்பே, தனக்கு நெருக்கமாக இருந்த உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்களைப் பெற்று சேகரித்து வைத்திருக்கிறாராம் ஓபிஎஸ்.

ஃபைலோடு
எடப்பாடி பழனிசாமி மேலும் முரண்டு பிடிக்கும் பட்சத்தில், அந்த ஊழல் பட்டியலில் இருக்கும் விவரங்கள் டெல்லிக்கும், சென்னை கோட்டைக்கும் கசியவிடப்படும் என்று கிசுகிசுக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். ஓபிஎஸ் விரைவில் டெல்லிக்கு ஒரு ஃபைலோடு பறந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். திமுக அரசும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமான போக்கையே கையாள்வதால், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

பேச்சை கவனிச்சா புரியும்
ஏற்கனவே, சிறையில் இருந்தபடி எப்படி கட்சியை நடத்துவார் எடப்பாடி எனக் கேட்டு வருகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். அது ஏற்கனவே இருக்கும் வழக்குகளை வைத்து மட்டுமல்ல, ஓபிஎஸ் கையில் இருக்கும் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்தும் தான் என்கிறார்கள். இதனால், எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தத் திட்டத்திற்கு அநேக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.