தலைநிமிரும் தமிழ்நாடு.. ஒரே செகண்டில் ஆடிப்போன ஆபீசர்ஸ்.. கடல் தாண்டிய ஃபோன்.. கோட்டையில் பெருமூச்சு
சென்னை: இன்னும் 3 நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க உள்ள நிலையில், அதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டை வருகிற 2030ம் வருடத்துக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில் துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு: இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் சார்பில், வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார்... சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பன்னாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு கருதப்படுகிறது. அதனால்தான், மாநாட்டுக்கு முன்னதாக, 1 ட்ரில்லியன் ட்ரீம்ஸ் #OneTrillionDreams என்ற தனித்துவமான சமூக ஊடக பிரச்சாரத்தை தமிழக அரசு துவங்கியிருக்கிறது.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசு பொருளாக மாற்ற இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது..
மாநாடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கப்போகும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து 32 பெரிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. ஆனால், 2 இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கம், தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டதாம்..
காரணம், நடக்க போகும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் 32 நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் ஜப்பானில் கோலோச்சும் நிறுவனங்கள் என்கிறார்கள்.. ஜப்பானுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்கிறோம் என்று உறுதி தந்த நிறுவனங்கள்தான் இவையெல்லாம்..
திடீர் கலக்கம்: ஆனால், திடீரென நிலநடுக்கம் வந்துவிடவும், இந்த நில நடுக்கத்தை சுட்டிக்காட்டி அந்த 18 நிறுவனங்களும் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டால் என்ன செய்வது என்கிற கலக்கம்தான் முதல்வருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஏற்பட்டுவிட்டதாம். இதனால் பதறிப்போன அதிகாரிகள், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்புகொண்டு, ஜப்பானில் உள்ள சூழலையும் நிலைமையையும் விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், நிலநடுக்கத்தால் பாதிப்பு பெரிதாக இல்லை என்பதால், அவசியம் மாநாட்டில் கலந்து கொள்வோம் என அந்த நிறுவனங்கள் உறுதி தந்தனவாம். இதற்கு பிறகுதான், அதிகாரிகளுக்கு நிம்மதி பெருமூச்சே வந்துள்ளது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications