மனசாட்சியே இல்ல.. தீபாவளிக்கு மதுரை செல்ல திட்டம் இருக்கா? ஆம்னி பேருந்து டிக்கெட் ரூ.4,100 மட்டுமே!
சென்னை: தீபாவளி பண்டியையை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.4,100ஆகவும், சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.5,000 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் புத்தாடை, ஸ்வீட்ஸ், பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடை வீதிகளில் திருவிழா போல் கூட்டம் கூடி வருகிறது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியோர் என்று அத்தனை தரப்பும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இம்முறை தீபாவளி திங்கட் கிழமை வருவதால், வியாழக் கிழமை முதலே சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பலரும் தயாராகி வருகின்றனர். அதன்பின் புதன் கிழமை போல் மீண்டும் சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 5,710 சிறப்புப் பேருந்துகள் என்று 4 நாட்களுக்கு 14,268 முறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் தென் மாவட்டங்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும், ஆந்திரா, திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் செல்கின்றன.
அதேபோல் காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி பேருந்துகள் கோயம்பேரு பேருந்து நிலையத்தில் இருந்தும் செல்கின்றன. ஏற்கனவே அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு முடிவடைந்துவிட்டன. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் செயலி மூலமாக பலரும் டிக்கெட்டை முன் பதிவு செய்துள்ளன. ஆனால் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை இம்முறையும் தொடர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அதாவது தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோர் கிட்டத்தட்ட விமான டிக்கெட்டுக்கு இணையான கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான டிக்கெட் குறைந்தபட்சமாக ரூ.4,100 ஆயிரமாக உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.700 முதல் ரூ.800 வரை கட்டணம் பெறப்படும். ஆனால் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications