ஸ்டாலினுக்கு நன்றி.. அதிமுக பண்ண வேண்டியதை பண்ணிட்டாங்க.. இனி நாங்க பண்ணுவோம்.. பிரேமலதா சுளீர்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், அவர் திமுகவுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரஸ் மீட்டில் குறிப்பிட்டிருந்தார் அது கவனம் பெறுவதாக உள்ளது.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் அதிமுகவுக்கு இரு இடங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர்கள் சொல்லி வந்தனர்.

தேமுதிக ராஜ்யசபா இடம்
கடந்த லோக்சபா தேர்தலின் போது உறுதியளித்தபடியே சீட் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் சொல்லி வந்தனர். இந்தச் சூழலில் அதிமுக இன்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்தாண்டு தேமுதிகவுக்கு வாய்ப்பு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரேமலதா
அப்போது அவர், "தேமுதிகவுக்கு 2026ல் ராஜ்யசா சீட் தருவதாக அதிமுக கூறியுள்ளது. 2024 லோக்சபா தேர்தல் சமயத்திலேயே 5 லோக்சபா சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்திருந்தனர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எடப்பாடி பழனிசாமி உட்பட மூத்த அமைச்சர்கள் இதை உறுதி செய்தனர். வாய்மொழியாக மட்டுமின்றி எழுத்துப்பூர்வமாகவும் உறுதியளித்திருந்தனர். அறிவிக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருந்தாலேயே நாங்கள் அமைதியாக இருந்தோம்.
ஏற்கனவே அதிமுக உறுதியளித்தபடி அன்புமணி, ஜிகே வாசனுக்கு சீட் வழங்கியிருந்தனர். அதன்படி இது தேமுதிகவுக்கான வாய்ப்பாகவே இருந்தது. இன்று அவர்கள் தங்கள் கடைமையை ஆற்றியுள்ளனர். இந்தாண்டுக்குப் பதிலாக அடுத்தாண்டு ராஜ்யசபா சீட்டை வழங்குவதாகக் கூறியுள்ளனர். நான் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அரசியல் என்பதே தேர்தலை ஒட்டி தான் இருக்கும். 2026 தேர்தலை ஒட்டியே ராஜ்யசபா சீட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்க செய்ய வேண்டியதைச் செய்வோம்
அவங்க (அதிமுக) தேர்தலுக்காகப் பண்ண வேண்டியதை பண்ணிட்டாங்க.. நாங்களும் தேர்தலுக்காகப் பண்ண வேண்டியதைப் பண்ணுவோம்.. வரும் ஜனவரி எங்கள் முடிவு அறிவிப்போம். கூட்டணி உடன்படிக்கை போடும் போது ஒரு ராஜ்யசபா சீட் என ஒதுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் எம்பி சீட் தரக்கூடிய ஆண்டை குறிப்பிட அப்போதே பேச்சுவார்த்தையில் சொன்னேன்.. ஆனால் அது வழக்கம் இல்லை என்று எடப்பாடி மறுத்துவிட்டார்" என்றும் தெரிவித்தார்.
அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி
மேலும், இன்று மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அண்ணன் என குறிப்பிட்ட பிரேமலதா, விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு திமுகவுக்கும் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "விஜயகாந்த் மறைந்து 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. விஜயகாந்த் மறைந்தபோது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் இங்கேயே இருந்து இறுதி மரியாதை கொடுத்தனர். அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது. எங்கள் துயரத்தில் பங்கேற்றனர். அதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அந்த வகையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி" என்றார்.












Click it and Unblock the Notifications