திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இன்னும் தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளை தேமுதிக கேட்ட பிடிவாதம் செய்கிறது. இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எந்தெந்த தொகுதிகளை தேமுதிக கேட்கிறது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. புதிதாக கூட்டணியில் இணைந்தாலும் கூட ஸ்டாலின் அந்த கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஒரு ராஜ்யசபா சீட் வழங்கி உள்ளதோடு, 10 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கி உள்ளார்.

இதன்மூலம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக அதிக தொகுதிகளை தேமுதிக பெற்றுள்ளது. அதாவது தேமுதிகவிற்கு தான் இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேமுதிகவால் சிக்கல்
அதோடு இரட்டை இலக்கத்தில் சீட் கேட்ட 2 கம்யூனிஸ்டுகளையும் கடந்த முறையை விட தலா ஒரு தொகுதியை குறைத்து 5ல் திமுக நிறுத்தியது. 10க்கும் மேலான தொகுதிகளை கேட்ட விசிகவிற்கு 8 வழங்கி உள்ளது. தேமுதிகவிற்கு தங்களை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் கொள்கை கூட்டணி, பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வருத்தம் இருந்தாலும் திமுகவுடன் பயணிக்கிறோம் என்று தலைவர்கள் கூறி வருகின்றனர்.
தொகுதி பிரிப்பில் தேமுதிக அடம்
இந்நிலையில் தான் தற்போது தேமுதிகவால் திமுகவுக்கே சிக்கல் வந்துள்ளது. தேமுதிகவிற்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் திமுக - தேமுதிக இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது தேமுதிக, திமுக கூட்டணியில் விஜயகாந்த் வென்ற தொகுதிகள் உள்பட திமுக எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகளை கேட்டு வருவது தான் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
அதாவது விஜயகாந்த் தனது அரசியல் பயணத்தை விருத்தாச்சலம் தொகுதியில் தொடங்கினார். 2006ல் இங்கு தான் அவர் போட்டியிட்டு முதல் முறையாக வென்றார். அதன்பிறகு 2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வென்று எதிர்க்கட்சி தலைவரானார். அதேபோல் விருத்தாச்சலத்திலும் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
விட்டு கொடுத்த காங்கிரஸ்
இந்த 2 தொகுதிகளை தேமுதிக கேட்கிறது. இதில் விருத்தாச்சலத்தில் காங்கிரஸ் கட்சி யின் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவாக உள்ளார். இதனால் காங்கிரஸ் தயங்கிய நிலையில் தற்போது விட்டு கொடுத்துள்ளது. இதன்மூலம் விருத்தாச்சலம் தொகுதி தேமுதிகவிற்கு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஒரு சிட்டிங் எம்எல்ஏவின் தொகுதியை தேமுதிகவால் இழந்துள்ளது.
திமுகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக
காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஆப்பு வைத்த தேமுதிக, திமுகவையும் விடவில்லை. தற்போது ரிஷிவந்தியம் தொகுதியையும் கேட்கிறது. ரிஷிவந்தியம் தொகுதியில் 2016, 2021 தேர்தலில் திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் வெற்றி பெற்றார். இப்போது அவர் தான் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியை திமுகவிடம் கோரி வருகிறது. இதற்கு திமுக சம்மதம் தெரிவிக்க மறுத்து வருகிறது.
சென்னையில் 2 தொகுதிகள்
அதுமட்டுமின்றி சென்னை திமுகவின் கோட்டையாக உள்ளது. இப்படியான சூழலில் தேமுதிக சென்னையில் எழும்பூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளை கேட்கிறது. இதில் எழும்பூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திமுகவின் பரந்தாமன் உள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2011ல் தேமுதிகவின் நல்ல தம்பி வெற்றி பெற்றார். இதனால் எழும்பூர் தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது.
அதேபோல், விருகம்பாக்கம் எம்எல்ஏவாக திமுகவின் பிரபாகர ராஜா இருக்கிறார். இந்த தொகுதியில் கடந்த 2011ல் தேமுதிகவின் பார்த்தசாரதி வென்றார். இதனால் விருகம்பாக்கம் தொகுதியையும் தேமுதிக கேட்டு வருகிறது. இந்த தொகுதிகளுக்கு பதில் உளுந்தூர்பேட்டை தொகுதியை வழங்க திமுக முன்வந்துள்ளது. இதற்கு தேமுதிக தயக்கம் காட்டுகிறது. இதனால் திமுக - தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும் இன்றைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக ஆர்வமாக செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications