தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ்..திமுகவினருக்கு செம கவனிப்பு! ‘டாடா’ காட்டிய அதிமுக.. அப்செட்டான ர.ர.க்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையால் முழு தமிழகமும் உற்சாகத்தில் திளைத்திருந்தாலும், அரசியல் கட்சிகளின் முகாம்களில் மாறுபட்ட காட்சிகள் நிலவுகின்றன. ஆட்சியில் உள்ள திமுக வெயிட்டாக திமுகவினருக்கு 'ஸ்வீட் பாக்ஸ்'களை இறக்கியுள்ளது. கட்சித் தொண்டர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவருக்கும் 'பரிசுகள்' வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமகவில் அதற்கு முற்றிலும் நேர்மாறான நிலை நிலவுகிறது. தேர்தல் செலவுக்கு பணமில்லை என மா.செ.க்கள் கைவிரித்து விட்ட நிலையில், புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு முடிந்திருக்கிறது. பொதுமக்கள் பட்டாசு வெடித்து, புத்தாடை அணித்து தீபாவளியை கொண்டாடினர். அரசியல் கட்சிகளோ தொண்டர்களை உற்சாகப்படுத்த தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி உள்ளன.
குறிப்பாக அடுத்த ஆண்டு 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளியை பயன்படுத்தி உள்ளனர். அதிமுக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் தொண்டர்களுக்கு சிறப்பாக 'ஸ்வீட் பாக்ஸ்களை' வழங்கி உள்ளன.

திமுக தீபாவளி பரிசு
இது தொடர்பாக விசாரித்த போது கிடைத்த தகவலின்படி, தி.மு.க., தலைமை, கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், வார்டு, பகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவருக்கும் தீபாவளி பரிசாக பணம் வழங்கியுள்ளது. இதில், பகுதி பிரதிநிதிகள் மற்றும் துணைச் செயலர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், வார்டு செயலர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக மகிழ்ச்சி
மேலும், ஒன்றிய மற்றும் நகர செயலர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டு வேட்டி, பட்டு சேலை, பட்டாசு, இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவகை பரிசுகள் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு, கட்சித் தொண்டர்களின் உற்சாகம் நிலையாக உயர்ந்துள்ளது.
அதிமுக தொண்டர்கள்
இதற்கு நேர்மாறாக, அதிமுக தீபாவளிக்கு சோகமே நிலவுகிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே கட்சி தலைமை எந்தவிதமான தீபாவளி பரிசுகளையும் வழங்கவில்லை என அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். இம்முறை கூட அதே நிலையே நீடிக்கிறது. இதனால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். தற்போது, அதிமுக தலைமை, தவெக. கூட்டணியே தங்களுக்கான "கடைசி நம்பிக்கை" எனக் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி
அ.தி.மு.க. - பா.ஜ. - த.வெ.க. கூட்டணி உருவானால் அது வெற்றிக்கூட்டணி ஆகும்" என்ற நம்பிக்கையில் கட்சி தலைமை செயல்படுகிறது. ஆனால், அதற்காகவே கட்சித் தொண்டர்களின் மனவுறுதியை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதே நிர்வாகிகளின் வருத்தம். தற்போதைய நிலைமை குறித்து சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில்," ஜெயலலிதா காலத்தில் எந்தத் தேர்தலாக இருந்தாலும், அ.தி.மு.க. தான் முதலில் களமிறங்கும். கூட்டணி யார் என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல், தொண்டர்கள் தன்னம்பிக்கையுடன் வேலை செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கட்சி தலைமைக்கே தன்னம்பிக்கை குறைந்து விட்டது.
த.வெ.க. கூட்டணி
'மெகா கூட்டணி அமைப்போம்' என்ற நம்பிக்கையில் தான் தலைவர்கள் இருக்கிறார்கள். பெரிய கட்சி நம் கூட்டணிக்கு வரப் போகிறது' என பொதுச்செயலர் எடப்பாடியே சொல்லி வந்தாலும், தொண்டர்களிடையே மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. அப்போ நாம் பெரிய கட்சி இல்லையே என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்திருக்கிறது," என்கின்றனர். தற்போது, முன்னாள் அமைச்சர்கள் மாறி மாறி விஜய்க்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக - தவெக கூட்டணி உருவாகாத நிலை உள்ளதால், அதிமுகவில் தொண்டர்களின் உற்சாகம் மேலும் குறையும் என்ற அச்சமும் நிலவுகிறது.
அதிமுக ஏமாற்றம்
கூட்டணி இல்லாவிட்டாலும் வெற்றியைப் பெறும் நம்பிக்கை கட்சித் தொண்டர்களுக்குள் ஊட்டப்பட வேண்டும். வெற்றிக்கு பிறரை நம்பும் நிலை, கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலே அ.தி.மு.க. மீண்டும் வலுவாக எழலாம். மொத்தத்தில், தி.மு.க.வில் தீபாவளி மகிழ்ச்சி பரவியுள்ள வேளையில், அ.தி.மு.க.வில் "கூட்டணிக்காக காத்திருக்கும் அமைதி" மட்டுமே நிலவுகிறது என புலம்புகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications