திமுக தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல.. திருமாவளவனுடன் விவாதத்துக்கு தயார்- விஜய்.. துக்ளக் குருமூர்த்தி
சென்னை: தமிழ்நாட்டுக்கு திமுக நல்லது அல்ல; திராவிடத்தின் கீழ் ஒரு குடும்ப ஆட்சியின் கீழ் தமிழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது; இந்துத்துவத்தை விமர்சிக்கும் திருமாவளவனுடன் நேரடியாக விவாதம் நடத்த தாம் தயாராக இருப்பதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் இதுதான் நடக்கும் எனவும் கூற முடியாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 55-வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: சீமானுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அரசியலில் பெரியாரை நேரடியாக முதன் முதலாக எதிர்த்தார் என்பதற்காக சீமானை நான் பாராட்டுகிறேன். சீமான் உழைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது.

பிராமணர் எதிர்ப்பால் பெரியாருக்கு மரியாதை
பிராமணர்களை எதிர்த்ததால்தான் பெரியாருக்கு மரியாதையே கிடைத்தது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் இல்லை எனில் பெரியாருக்கு இந்த மரியாதையே இருக்காது.
திருமாவளவனுடன் விவாதம் நடத்த தயார்
அம்பேத்கர் இந்துத்துவத்துக்கு எதிரி; இதனை தமிழ்நாட்டில் தீவிரமாக பிரசாரம் செய்து கொண்டிருப்பவர் திருமாவளவன். அவரோடு ஒருநாளைக்கு நேரடியாக சவால்விடப் போகிறேன்.. என்னுடன் விவாதத்துக்கு வர வேண்டும்.
திமுக நாட்டுக்கு நல்லது அல்ல
ஒரு சக்கரவியூகத்தின் கீழ் மாட்டிக் கொண்டிருப்பது போல திராவிடத்தின் கீழ் அதுவும் ஒரு குடும்பத்தின் கீழ் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். திமுக இந்த தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.. அது வாரிசு ஆட்சி.. குடும்ப ஆட்சி.. தமிழ்நாட்டை அமைதிப்பூங்கா என கூறுகிறீர்களே என கேட்கிற அளவுக்கு பத்திரிகைகளுக்கு முதுகெலும்பு இல்லை.. இதுதான் உண்மை. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது வாரிசு அரசியலை அந்த கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது.. இதை அந்த கட்சி ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. கருணாநிதி சாதுரியமானவர்; அதனால்தான் எத்தனை எதிர்ப்பு; வீழ்ச்சியிலும் திமுகவை நடத்த முடிந்தது.
விஜய் அரசியல் வருகை
இன்றைக்கு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்; இதனால் தமிழ்நாட்டில் இதுதான் அடுத்து நடக்கும் என்று சொல்லக் கூடிய நிலையில் இல்லை. எல்லோரும் அடுத்த டிசம்பர் வரை தமிழ்நாடு அரசியல் இப்படித்தான் போகும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த திசையில் தமிழ்நாடு அரசு போய்க்கொண்டிருந்தால் திமுகவுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் மிகப் பெரிய அவப் பெயரை பெற்றுக் கொடுத்துவிடும். இவ்வாறு துக்ளக் குருமூர்த்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications