பொது சிவில் சட்டத்தால் யாருக்கு லாபம்? அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம்! ஜே.எம்.பஷீர் 'பளிச்'!
சென்னை: பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் யாருக்கு லாபம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் திமுக சிறுபான்மை பிரிவு பிரமுகரும், நடிகருமான ஜே.எம்.பஷீர். முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்ய முனையும் பாஜகவை மனசாட்சி உள்ள எந்த மனிதர்களும் நம்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
பொது சிவில் சட்டம் தேவையா என்பது பற்றியும் அதை எதிர்ப்பதற்கான காரணம் குறித்தும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் ஜே.எம்.பஷீர். அதன் விவரம் வருமாறு;

''இந்தியாவில் இருக்கும் பல்வேறு சமூகத்தினரும் அவரவர் மத நம்பக்கையின் அடிப்படையில் திருமனம், விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பதை வெவ்வேறு சட்டங்கள் மூலம் கடைப்பிடிக்கின்றனர். பொது சிவில் சட்டம் என்று சொன்னால் அனைவரின் பார்வையும் முஸ்லிம்கள் மீது தான் திரும்பும். முஸலிம்கள் மட்டுமல்ல், சீக்கியர், ஜெயினர்கள் என சார்ந்துள்ள மதத்திற்கு ஏற்றார் போல சிவில் சட்டம் மாறுபட்டிருக்கும்.''
''இந்தியாவில் குற்றவியல் சட்டம், தன்டணை சட்டம் பொதுவானதாக உள்ளது. உரிமையியல் சட்டம் என்று சொல்லப்படும் சிவில் சட்டம் மட்டும் ஜாதி, மத, இனரீதியாக, கலாச்சாரத்திற்கு ஏற்றார் போலவும், ஒவ்வொரு மதத்திற்கு ஏற்றார் போலவும் மாறுபட்டிருக்கிறது. சீக்கியர்கள் அவர்களின் மதச்சட்டபடி சுய பாதுகாப்பிற்காக எந்த இடத்திலும் குருவாள் வைத்து கொள்ளலாம். ரானுவத்திலும், காவல்துறையிலும் உள்ள விதிகளுக்கு மாறாக தாடி வைக்கலாம், அந்த துறையின் சார்பாக உள்ள தொப்பியை பயன்படுத்தாமல் டர்பன் கட்டிக் கொள்ளலாம்.''
''மோடி சொல்கிறார் ஒரு நாட்டிற்கு எதற்கு இரண்டு சட்டம். ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிறது மோடியின் பாஜக. பொது சிவில் சட்டத்தால் சிதம்பரம் தீட்சிதர்கள் கடைப்பிடிக்கின்ற தீண்டாமையை தடுக்க முடியுமா, குழந்தைகள் திருமணத்தை தடைசெய்ய முடியுமா, குடியரசு தலைவரானாலும் கோவில் கருவறைக்குள் சென்று சாமி கும்பிட முடியுமா, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கின்ற திமுகவின் சமத்துவ நிலைலய இந்தியா முழுவதும் செயல்படுத்த முடியுமா, மதத்தின் பெயரால் மாற்று மதத்தவரை துன்புறுத்துவதை தண்டிக்கமுடியுமா?''
''இந்துக்கள் அனைவரும் சமம், ஜாதி மத வேறுபாடு நீங்கி, அவர் இந்த ஜாதி இவர் அந்த ஜாதி என்ற நிலை மாறுமா? சிவில் சட்டம் வேறு உரிமையியல் சட்டம் வேறு என குழப்புகிறார்கள் பாஜகவினர். முஸ்லிம்களுக்கு இருப்பது ஒரே ஒரு உரிமையியல் சட்டம் தான், ஷரியத் சட்டம். ஆனால் இந்துக்களுக்கு 11 உரிமையியல் சட்டங்கள், கிறுஸ்துவர்கள்,புத்தர்கள்,சீக்கியர்கள்,ஜெயினர்களுக்கும் தனித்தனி உரிமையியல் சட்டம் உள்ளது.''
''ஷரியத் சட்டத்தால் இந்துக்களுக்கோ மற்ற எந்த மதத்திற்கோ பாதிப்பில்லை. ஷரியத் சட்டம் கூறுவது 5 விஷயங்கள் தான், திருமனம், விவாகரத்து, வாரிசுரிமை, ஜீவனாம்சம், சொத்துரிமை. இந்த ஐந்து விஷயங்களுக்காக பாஜக மோடி அரசு வேறு சட்டங்களை இயற்றினால் அதைத்தூக்கிக் கொண்டு எந்த ஈமான் உள்ள முஸ்லிமும் கோர்ட்டிற்கு வரப்போவதில்லை. கடந்த 9 வருடங்களாக இதோ வருகிறது அதோ வருகிறது என்று கூறிவந்த மோடி அரசு தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற வேலையில் மீண்டும் பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து அதை நிறைவேற்ற துடிக்கிறது.''
''அண்ணன் தம்பியாக வாழ்ந்து வரும் என் அருமை மாற்று மத சகோதர்களே சிந்தியுங்கள். பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் யாருக்கு லாபம். நிச்சயம் முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்யும் இந்த செயலை மனசாட்சி உள்ள எந்த மனிதர்களும் பாஜகவை நம்பமாட்டார்கள். ''












Click it and Unblock the Notifications