சம்பளத்தில் இதுவரை 1 ரூபாய் கூட தொடாத திமுக எம்.எல்.ஏ.! நானே அப்படியில்லை! மெச்சிக்கொண்ட ஸ்டாலின்!
சென்னை: சட்டமன்ற உறுப்பினருக்கான மாதச் சம்பளத்திலிருந்து இதுவரை 1 ரூபாயை கூட எடுக்காமல், தொகுதியை சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும், கல்வி உதவித் தொகைக்கும் செலவு செய்பவர் தான் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் என ஸ்டாலின் மெச்சிக்கொண்டார்.
234 தொகுதிகளில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கபாண்டியனை போல சம்பளத்தைப் பெறாமல் மக்களுக்காக பணியாற்றக்கூடிய MLA உண்டா? என்றால் இல்லையென்றுதான் சொல்லியாக வேண்டும் என்றார் ஸ்டாலின்.

ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல மணவிழாவை சென்னையில் தலைமை தாங்கி நடத்தி வைத்த அவர் இதனைக் கூறினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
''தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை பற்றிய செய்தி ஒன்றை நான் இங்கு பெருமையோடு சொல்லியாகவேண்டும். அவர் எப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அன்றிலிருந்து இன்றுவரை ஏற்கனவே, 5 ஆண்டாக இருந்தாலும் சரி, அதற்குப்பிறகு இப்போது இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி, இதுவரையில் சட்டமன்ற உறுப்பினருடைய சம்பளப் பணத்தை தனக்கு செலவழித்ததில்லை.
தன்னுடைய தொகுதி மக்களுக்காக, அந்த தொகுதியில் இருக்கக்கூடிய இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு, கல்வி உதவிக்கு அதை அவர் செலவு செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.
இதுவரை 234 தொகுதிகளில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கபாண்டியனை போல சம்பளத்தைப் பெறாமல் மக்களுக்காக பணியாற்றக்கூடிய MLA உண்டா? என்றால் நான் உள்பட சொல்லுகிறேன் இல்லையென்று தான் சொல்லியாக வேண்டும். அந்த அளவிற்கு அவர் மக்களிடத்தில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறார்.
மக்களுடைய உள்ளத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றிருக்கக்கூடிய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.''












Click it and Unblock the Notifications