5-ம் தேதி மாலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.. அரசு தலைமை கொறடா அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இதுவாகும். கொரோனா தொற்று காரணமாக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலைவாணர் அரங்கத்தில்தான் நடைபெற்று வந்தது.
இந்த முறை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலக வளாகத்துக்குள் உள்ள சட்டமன்றத்திற்குள் சட்டசபையை நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்ட நேரத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தது. இதனால் கலைவாணர் அரங்கத்தில்தான் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 5-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தை தொடர்ந்து பொது பட்ஜெட்டும், அடுத்ததாக மானிய கோரிக்கையும் இங்கேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதமில்லா கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் வருகிற 5-ம் தேதி மாலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 5-ந் தேதி மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கில்' நடைபெறுகிறது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் " என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications