சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்றம்: நாங்க ரெடி...முதலில் நீங்க விவாதத்துக்கு ரெடியா?பிரதமர் மோடிக்கு முரசொலி நறுக் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றன; ஆனால் விவாதம் நடத்துவதற்கு பிரதமர் மோடி தயாரா? என தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கேள்வி எழுப்பி உள்ளது.

முரசொலி நாளேடு இன்று எழுதியிருக்கும் தலையங்கம்: நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமான விவாதங்களுடன் நடைபெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உண்மைதான். அது அனைவராலும் வழிமொழியத் தக்க கருத்தே ஆகும். அப்படி நாடாளுமன்றம் நடத்தப்படுகிறதா? அனைத்தும் விவாதிக்கப்படுகிறதா, விவாதிக்கப்பட்டதா என்றால் இல்லை! சில மாதங்களுக்கு முன்னால் ஒரு அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத்தில் என்னென்ன சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஆயிரம் ஸ்டாலின் ஏன்? அதிமுகவை அழிக்க பழனிசாமி போதும்! பாஜக பாதம் தாங்கிய சேலத்து சேக்கிழார் -முரசொலி ஆயிரம் ஸ்டாலின் ஏன்? அதிமுகவை அழிக்க பழனிசாமி போதும்! பாஜக பாதம் தாங்கிய சேலத்து சேக்கிழார் -முரசொலி

தடை செய்யப்பட்ட சொற்கள்

தடை செய்யப்பட்ட சொற்கள்

வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன. முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் போன்ற வார்த்தைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிச் சில வார்த்தைகள் மட்டுமல்ல, பொதுவாகவே பா.ஜ.க.வுக்கு எதிரான எந்தப் பொருள் பற்றியும் தனிப்பட்ட சிறப்பு விவாதம் நடத்துவதற்கான அனுமதி இல்லை என்பதையே நாம் பார்க்கிறோம்.

பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடி அழைப்பு


இந்த நிலையில் விவாதங்கள் குறித்து பிரதமர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். ''அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் அது விவாதத்துக்கு வலுசேர்க்கும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய அங்கம் ஆகும். மக்களின் பிரச்சினைகளுக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களின் மூலமே மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற முடியும். எனவே நடப்புக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒத்துழைக்க மற்ற கட்சிகள் தயார். ஆனால் விவாதம் நடத்துவதற்கு பிரதமர் தயாரா என்பதுதான் அனைவரது கேள்வி!

பெகாசஸ் ஒட்டு கேட்பு

பெகாசஸ் ஒட்டு கேட்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த காட்சிகளை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களது தொலைபேசி எண்கள், அந்நிய நாட்டு நிறுவனத்தின் துணையோடு ஒட்டுக் கேட்கப்பட்ட தகவல் வெளியானது. 'பெகாசஸ்' ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம், மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் விவாதம் நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே ஒரு கோரிக்கை. விவாதம் நடத்த மறுத்தது பா.ஜ.க.

14 கட்சிகள் கோரிக்கை

14 கட்சிகள் கோரிக்கை

''நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். பெகாசஸ் பிரச்சினை தேசிய பாதுகாப்பு சார்ந்தது என்பதால் உள்துறை அமைச்சர் பதிலளிக்கும் வகையில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும்" - என்று 14 கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள். இந்தக் கோரிக்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கும் கோரிக்கையாக மட்டுமல்ல, இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் கோரிக்கையாகவும் உள்ளது. இந்தியப் பிரமுகர்களை ஒட்டுக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம். இது பற்றி விவாதம் நடத்த மறுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வேளாண் சட்டங்கள், ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை, கொரோனா மரணங்கள் இவை எது குறித்தும் நாடாளுமன்றத்தில் தனித்த விவாதங்கள், சிறப்பு விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி விட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

விவாதமே நடத்தவில்லையே

விவாதமே நடத்தவில்லையே

வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக தேர்தல் சட்ட மசோதாவைக் கொண்டு வருவதாகச் சொல்லப்பட்டாலும் இதற்குள் மறைமுகமாக பல்வேறு உள்ளடக்கங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லவே பா.ஜ.க. தரப்பு தயாராக இல்லை. இப்படி எல்லாவற்றையும் விளக்கம் அளிக்காமல் பெரும்பான்மை என்று சொல்லி நிறைவேற்றிக் கொள்வது அவர்களது பாணி. ஆதார் அட்டை என்பது 'யாரை வாக்காளராக எதிர்காலத்தில் வைக்கலாம், யாரை நீக்கலாம்' என்பதை வரையறுப்பதற்கான மறைமுக தடங்கலாக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களை மட்டும் நீக்கிவிட்டு, மற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வார்கள் என்று சந்தேகம் கிளப்பப்படுகிறது. ''இந்த மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்ட பிறகே நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்" என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் கோரினார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலேயே சரியான விவாதம் நடத்தாமல்தான் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது இல்லை. முக்கியமான நேரங்களில் பிரதமரோ, முக்கிய அமைச்சர்களோ அவையில் இருப்பது இல்லை. இவ்வாறு முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது.

English summary
DMK has Questiond that the Prime Minister Modi's appeals on Parliament Debates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X